மலேசிய முஸ்லிம் தலைவர்களிடையே அரசியல் போட்டி குறைய வேண்டும்: சுல்தான் நஸ்ரின்

மலேசிய முஸ்லிம் தலைவர்களிடையே அரசியல் போட்டி குறைய வேண்டும்: சுல்தான் நஸ்ரின்

2 mins read
be400505-2bf2-474b-8f56-12f8a58ae162
பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

ஈப்போ: அரசியல், சமயச் சிந்தனைகள், இனம் மற்றும் தனிப்பட்ட நலன்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக முஸ்லிம்களின் ஒற்றுமை அதிகமான சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்று பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கூறியுள்ளார்.

செல்வாக்கு, பதவி, நிலை, செல்வம், உலகியல் சுகபோகங்களைத் தேடும் வேட்கையுடன் இந்தக் காரணிகளும் சேர்ந்து, சகோதரத்துவ உணர்வை மேலும் மேலும் மறைத்து, முஸ்லிம்களிடையே உள்ள ஒற்றுமையைப் புறக்கணிக்கச் செய்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் தலைவர்கள், இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவை தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்து, அரசியல் போட்டியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதே சமயம் சமூகத்தின் அடையாளத்தையும் முன்னேற்றத்தையும் வலுப்படுத்தக்கூடிய முன்னெடுப்புகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அரசியல் தலைவர்களும் குழுக்களும் போட்டியிடவும் சர்ச்சைகளில் ஈடுபடவும் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், இஸ்லாமியக் கல்வியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நேர்மறையான முயற்சிகளுக்கு முன்னோடியாகத் திகழும் தனிநபர்களும் அமைப்புகளும் இருப்பது ஊக்கமளிப்பதாகவும், நாம் நன்றியுடன் போற்ற வேண்டிய ஒன்றாகவும் உள்ளது.

“இவற்றில் இஸ்லாமியப் பொருளியல், இஸ்லாமிய நிதி, ஹலால் தொழில், வக்ஃப் அமைப்பு, மின்னிலக்க ஒற்றுமை, குடும்ப அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். இத்தகைய முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு, வலுப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்,” என்று சுல்தான் நஸ்ரின் செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 25) ஈப்போவில் நடைபெற்ற பேராக் அளவிலான மௌலிதுர் ரசூல் கொண்டாட்டத்தில் தமது அரச உரையில் கூறினார்.

சமூக ஊடகங்கள், பிரபலமான கலாசாரம், பொழுதுபோக்கு, நவீன வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட உலகளாவிய தாக்கங்களுக்கு அதிகளவில் ஆளாவதால், முஸ்லிம் அடையாளம், சமூகத்தின் விழுமியங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சுல்தான் சுட்டிக்காட்டினார்.

முன்னேற்றமும் நவீனமயமாக்கலும் இஸ்லாமியக் கொள்கைகளையும் அடையாளத்தையும் சிதைத்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, விவேகமான அணுகுமுறைகளும் உத்திகளும் தேவை என்று அவர் கூறினார்.

“நவீனமயமாக்கல் ஒருவரின் சொந்த அடையாளத்தின் மீதான நம்பிக்கையிழப்புக்கு வழிவகுக்காத வகையில், ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
ஒற்றுமைஅடையாளம்முஸ்லிம்