தெற்காசியாவில் இளம் தலைமுறையினரால் (Gen Z) முன்னெடுக்கப்படும் ஆட்சி மாற்றங்கள் குறித்த தெற்காசிய ஆய்வுக் கழக மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) நடைபெற்றன.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆசிய நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் நதீம் மாலிக் இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பாகிஸ்தானில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் எவ்வாறு அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதைப் பற்றி விளக்கினார்.
பாகிஸ்தானில் ஊழல் ஒழிப்பு என்பது வெறும் ‘நல்லாட்சி’க்கான நடுநிலையான முன்னெடுப்பு அல்ல; ஜனநாயக அரசியலை முடக்குவதற்கும், அரசு வளங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை மாற்றி அமைப்பதற்குமான ‘அரசியல் தொழில்நுட்பமாகவே’ செயல்படுகிறது என்று பேராசிரியர் நதீம் மாலிக் வாதிட்டார்.
பாகிஸ்தானின் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குக் காரணமாக இருந்த தரப்புகள், நாட்டை மீட்க வருபவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டதாகப் பேராசிரியர் நதீம் சுட்டினார்.
1958-இல் அயூப் கான், 1977-இல் ஜியா-உல்-ஹக் மற்றும் 1999-இல் பர்வேஸ் முஷாரப் ஆகியோரின் ராணுவத் தலையீடுகள் அனைத்தும் ஊழல் ஒழிப்பு என்ற அறம் சார்ந்த முழக்கத்தை பயன்படுத்தியே நிகழ்ந்தன.
“ஊழலை நாட்டின் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணமாகச் சித்தரித்து, அரசியல்வாதிகளை ஓரங்கட்டி, ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தங்களுக்குள் மையப்படுத்தினர்,” என்று அவர் கூறினார்.
குறிப்பாக, முஷாரப் காலத்தில் உருவாக்கப்பட்ட ‘என்ஏபி’ (NAB) போன்ற நிறுவனங்கள், ஊழலை ஒழிப்பதை விட அரசியல்வாதிகளை அச்சுறுத்தவும், தங்களுக்குச் சாதகமான கூட்டணிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்ட அரசியல் மேலாண்மைக்காகச் செயல்பட்டன என்று பேராசிரியர் நதீம் விளக்கினார்.
ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு இல்லையென்றாலும் அதே ‘தொழில்நுட்பம்’ எவ்வாறு இயங்குகிறது என்பதற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் எழுச்சியை பேராசிரியர் நதீம் மாலிக் உதாரணமாகக் காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“இம்ரான் கான் அதிகாரத்தைக் கைப்பற்ற ராணுவத்தைப் பயன்படுத்தாவிட்டாலும், ஊழல் ஒழிப்பு என்ற அதே அரசியல் கட்டமைப்பையே பயன்படுத்தினார். நாட்டைத் தூய்மைப்படுத்தும் ஒரு மக்கள் தலைவராகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஆட்சியைப் பிடித்த அவர், மேற்கூறிய அதே அதிகாரமிக்க நிறுவனங்களைப் பயன்படுத்தியே எதிரிகளை எதிர்கொண்டார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்தக் கட்டமைப்பு அதிகாரத்தின் பக்கமே சாய்வதால், 2022-க்குப் பிறகு அதிகார மையங்கள் மாறியபோது, அதே ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் இம்ரான் கானும் சிறையிலடைக்கப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்தத்தில், கைது நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் மட்டுமே மையமாகக் கொண்ட அதிகாரத்துவ ஊழல் ஒழிப்பு உத்திகள் பாகிஸ்தானில் உண்மையான கட்டமைப்பு மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
“அரசியல் தலைவர்கள் இந்த உத்திகளை மிக எளிதாகப் பயன்படுத்தித் தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்கிறார்களே தவிர, ஆழமாக வேரூன்றியுள்ள அதிகார பேரம், சலுகை வலைப்பின்னல்களை (patronage networks) தகர்க்கத் தயாராக இல்லை. இந்த அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணாதவரை, பாகிஸ்தானில் ஊழல் தொடரும் என்றும்,” ஊழல் ஒழிப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மை தொடர்ந்து சரியும், என்றும் பேராசிரியர் நதீம் கூறினார்

