நியூயார்க்: புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமின்றி அபாயகரமான சூழலுக்குள் அரசியல் லாபத்துக்காகத் தள்ளப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர்கள் குற்றவாளிகள் அல்லர் எனக் குறிப்பிட்ட அவர், “ஒத்துழைப்பதைத் தவிர்த்து, உலக நாடுகள் அரசியல் லாபத்தை நாடுகின்றன. அச்செயல் அச்சம், பிரிவினை, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றைச் சார்ந்துள்ளது,” என்று அவர் கவலை தெரிவித்தார்.
புலம்பெயர்வு குறித்து நடந்த அதிகாரபூர்வமற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் திரு குட்டரெஸ் அவரது கருத்துகளை முன்வைத்தார். எந்தவொரு நாட்டையும் குறிப்பிடாமல் அவர் இந்தப் போக்கு அனைத்துக் கண்டங்களிலும் நடப்பதாகக் கூறினார்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் புலம்பெயர்தல் பற்றிய ஆய்வறிக்கையை உறுப்பு நாடுகளிடம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்டு அவர் உரையாற்றினார்.
ஆய்வில் கடந்த 2024ஆம் ஆண்டுவரை உலக மக்கள்தொகையில் 3.7 விழுக்காட்டினர் புலம்பெயர்ந்தவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 304 மில்லியன் என்றும் அவர்களில் 42 மில்லியன் குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புலம்பெயர்வோரின் பாதுகாப்பு மிகவும் கட்டுப்படுத்தப்படுவதால் ஏழைக் குடும்பங்கள் பாதிப்படைகின்றன. கடத்தல்காரர்களின் கைகளில் பலர் சிக்கிக்கொள்கின்றனர். பலர் உயிரிழக்கின்றனர்.
“மனித வரலாற்றில் துணிச்சல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் நிறைந்த ஒன்றாக புலம்பெயர்தல் வழக்கமாக நடந்துள்ளது. ஆகவே, தற்போது அது மரணமும் வேதனையும் இல்லாத ஒன்றாக அமைவதை நாம் உறுதிசெய்யவேண்டும்,” என்று திரு குட்டரெஸ் தமது உரையில் விளக்கினார்.

