சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் மோசமான காற்றுத்தரம்

1 mins read
9db0e825-7147-4d86-a9da-2fdab0719639
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) காலை 9 மணியளவில் நெகிரி செம்பிலான், சிலாங்கூரில் பதிவான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு முறையே 156, 155 எனத் தகவல்கள் கூறுகின்றன. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் காற்றின் தரத்தைக் கண்காணிக்க நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 நிலையங்களில் நான்கில், காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையாகப் பதிவாகியுள்ளது.

சிலாங்கூரில் இரண்டு நிலையங்களிலும் நெகிரி செம்பிலானில் இரண்டு நிலையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) காலை 9 மணிக்குக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100க்கும் அதிகமாகப் பதிவானது.

மலேசிய சுற்றுப்புறத் துறையின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு நிர்வாகக் கட்டமைப்பு இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவலின்படி, நெகிரி செம்பிலானின் நிலாய் வட்டாரத்தில் அந்தக் குறியீடு 156ஆகப் பதிவானது. சிலாங்கூரின் ஜோகான் சேட்டியாவில் அது 155ஆகப் பதிவானது.

மேலும், நெகிரி செம்பிலானின் போர்ட் டிக்சனில் 153ஆகவும் சிலாங்கூரின் பான்டிங்கில் 151ஆகவும் அந்தக் குறியீடு பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில், மலேசியாவின் காற்றுத்தரக் கண்காணிப்பு நிலையங்கள் 58ல் இந்தக் குறியீடு மிதமான அளவில் பதிவாகியுள்ளது.

புத்ரா ஜெயா, பாகாங், பெட்டாலிங் ஜெயா, மலாக்கா, பேராக் போன்ற பகுதிகளில் அது 99க்கும் 79க்கும் இடைப்பட்டிருந்தது.

ஆறு நிலையங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாகப் பதிவாகியுள்ளது.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்டிருந்தால் காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாகப் பொருள்படும்.

51 முதல் 100 வரை மிதமான நிலை என்றும் 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலை என்றும் 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலை என்றும் 300க்கும் அதிகமானால் அபாயகரமான நிலை என்றும் பொருள்படும்.

குறிப்புச் சொற்கள்