வத்திகன்: போப் ஃபிரான்சிசுக்கு பக்கவாதம் ஏற்பட்டு இதயச் செயலிழப்பால் காலமானார் என்று வத்திகன் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 21ஆம் தேதி 88 வயதான போப் ஃபிரான்சிஸ் மறைந்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 38 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவர் ஒரு மாதத்திற்குள் வத்திகனில் தான் தங்கியிருக்கும் சாண்டா மார்டா இல்லத்தில் காலமானார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு “ஈஸ்டர் வாழ்த்துகள்” தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் உட்பட உலகத் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முதல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
உலக முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
“நாங்கள் ஆதரவற்றவர்களாகிவிட்டோம்,” என்று போப் ஃபிரான்சிசின் சொந்த நகரமான பியூனஸ் அயர்ஸில் பணியாற்றும் சாலைத் துப்புரவாளரான ஜேவியர் லங்குவெனாரி, 53 தெரிவித்தார்.
வத்திகன் வெளியிட்ட மரணச் சான்றிதழ்படி போப் ஃபிரான்சிஸ் பக்கவாதத்தால் காலமானார். பக்கவாதத்தைத் தொடர்ந்து அவர் கோமாவில் வீழ்ந்தார். இதையடுத்து அவரது இதயம் மீண்டும் மீட்க முடியாத அளவுக்கு செயலிழந்தது.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு முன்பு அறியப்படாத நீரிழிவு நோய் (டைப் 2 டயாபிடிஸ்) இருந்தது என்றும் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேவாலய விவகாரங்களை உடனே தனது பொறுப்பில் எடுத்துக் கொண்ட கார்டினல் கெவின் ஃபாரெல், போப்பின் மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஏப்ரல் 22ஆம் தேதி கார்டினல்கள் ஒன்றுகூடி அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து திட்டமிடவிருக்கின்றனர்.
அவரது மறைவிற்கு நான்கு முதல் ஆறு நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 25க்கும் ஏப்ரல் 27க்கும் இடைப்பட்ட காலத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.