வத்திகன்: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவரான போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88.
போப் ஃபிரான்சிஸ், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காலை 7.35 மணிக்குக் காலமானார் என்று கார்டினல் கெவின் ஃபேரல் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
கார்டினல் கெவின் ஃபேரல், “சகோதர, சகோதரிகளே, நமது புனிதத் தந்தை ஃபிரான்சிஸ் மறைந்துவிட்டதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அச்செய்தியில் கூறினார்.
12 ஆண்டுகளாக போப்பாண்டவர் பொறுப்பை வகித்த முதல் லத்தீன் அமெரிக்கரான போப் ஃபிரான்சிஸ் பல சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் நியூமோனியா பாதிப்பு ஏற்பட்டு 38 நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் ஃபிரான்சிஸ் மார்ச் மாதம் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து திரும்பினார். அதற்குப் பிறகு முதன்முறையாகப் பொதுமக்களின் பார்வைக்கு வந்த மறுநாள் அவர் காலமானார்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் போப் ஃபிரான்சிஸ் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு தனது நடமாட்ட வாகனத்தில் (popemobile) சென்றார். அங்கு திரண்டிருந்த கூட்டம் அவரைக் கண்டு உற்சாகமடைந்தது.
சென்ற ஆண்டு கிறிஸ்துமசுக்குப் பிறகு அன்று அவர் முதன்முறையாகச் சிறப்பு ஆசி வழங்கினார்.
ஜோர்ஜே மரியோ பெர்கொக்லியோ என்ற பெயரைக் கொண்ட போப் ஃபிரான்சிஸ், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த அவர் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சம்பந்தப்பட்ட தரப்பினரை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியது.
ஏழைகள் மீது அக்கறை கொண்டவராகப் பார்க்கப்படும் போப் ஃபிரான்சிஸ், இப்பொறுப்பைப் பெற அதிக வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது.
போப் ஃபிரான்சிசின் மறைவுக்கு உலகத் தலைவர்களும் சிங்கப்பூர்த் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனி பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் ஃபிரீட்ரிக் மெர்ஸ், சமூகத்தில் ஆக அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடியோருக்கு ஆதரவளிப்பதில் சற்றும் தளராத கடப்பாடு கொண்டவராக நினைவில் நிற்பார் என்றார்.
“அடக்க குணம், இறைவனின் கருணை ஆகியவையே அவரின் வழிகாட்டிகள்,” என்றார் அவர்.
இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, “மிகச் சிறந்த சமூக வழிகாட்டி,” என்று அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “உலகின் பல மில்லியன் மக்கள் போப் ஃபிரான்சிசைக் கருணை, அடக்கம், ஆன்மிகம் ரீதியான துணிச்சல் ஆகியவற்றின் சின்னமாக என்றும் நினைவில் வைத்துக்கொள்வர்,” என்று மரியாதை செலுத்தினார்.
அதேபோல், பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோன், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இஸ்ரேலிய அதிபர் ஐசேக் ஹெர்ஸாக், உள்ளிட்டோரும் போப் ஃபிரான்சிசுக்கு மரியாதை செலுத்தினர்.