வத்திகன் சிட்டி: போப் ஃபிரான்சிஸின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாக சனிக்கிழமை (பிப்ரவரி 22) வத்திகன் தெரிவித்தது.
போப்பின் உடல்நிலை ‘கவலைக்கிடமாக’ உள்ளதாக வர்ணித்த வத்திகன், அவருக்கு செயற்கை உயிர்வாயு அளிக்கப்படுவதோடு ரத்தம் ஏற்றப்படுவதாகவும் கூறியது.
போப்புக்கு சில நாள்களாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலியத் தலைநகர் ரோமில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் பிப்ரவரி 14ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது.
காலையில் போப் ஃபிரான்சிஸுக்கு ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனால் அவருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்பட்டதாகவும் சனிக்கிழமை மாலை வத்திகன் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“போப்பின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் இன்னும் ஆபத்திலிருந்து மீளவில்லை,” என்று வத்திகன் கூறியது.
பிரார்த்தனைக் கூட்டத்தை வழிநடத்த 88 வயது போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை பொதுவெளியில் காணப்பட மாட்டார் என வத்திகன் தெரிவித்தது. உடல்நலக் காரணங்களால் தொடர்ச்சியாக இருமுறை போப் பிரார்த்தனையில் பங்கேற்காதது இதுவே முதன்முறை என நம்பப்படுகிறது.
பிரார்த்தனை செய்யும்படி அறைகூவல்
இதற்கிடையே, போப் ஃபிரான்சிஸுக்காக பிரார்த்தனை செய்யுமாறு உள்ளூர் கத்தோலிக்கர்களிடம் சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க பேராயம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து பேராயம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இணையத்தில் வெளியிட்ட பதிவில், போப்புக்காக பிரார்த்தனை செய்யும்படி இங்குள்ள 395,000 கத்தோலிக்கர்களுக்கு அறைகூவல் விடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
போப்பின் உடல்நிலை மோசமடைவதாகத் தெரிந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை பேராயம் அப்பதிவை மீண்டும் பகிர்ந்தது.
2024 செப்டம்பரில் போப் ஃபிரான்சிஸ் முதன்முதலாக சிங்கப்பூருக்கு வருகை புரிந்திருந்தார்.