வத்திகன் சிட்டி: இரட்டை நிமோனியா பாதிப்பை எதிர்த்துப் போராட்டிவரும் 88 வயது போப் ஃபிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், அது ‘சிறிதளவு மேம்பட்டுள்ளது’ என வத்திகன் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்தது.
இத்தாலியத் தலைநகர் ரோமில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் தொடர்ந்து 11வது இரவை போப் கழித்துள்ளார். 2013லிருந்து போப்பாண்டவராக இருந்துவரும் போப் ஃபிரான்சிஸின் ஆக நீண்ட மருத்துவமனை அனுமதி இது.
அவருக்கு இன்னமும் உயிர்வாயு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அதன் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக வத்திகன் தெரிவித்தது.
அவருக்கு ‘லேசான சிறுநீரகப் பிரச்சினை’ இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியான நிலையில், அது ‘கவலைக்குரிய அம்சம் இல்லை’ என்பதை வத்திகன் தெளிவுபடுத்தியது.
போப் ஃபிரான்சிஸ் எப்போதும்போல உணவு உட்கொள்வதாகவும் அவரால் எழுந்து மருத்துவமனை அறையில் நடமாட முடிவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத வத்திகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வத்திகன் திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், அன்றைய தினம் பிற்பகலில் போப் ஃபிரான்சிஸ் பணியைத் தொடர்ந்ததாகக் கூறியது. அவருக்கு மேலும் சுவாசப் பிரச்சினை ஏற்படவில்லை எனவும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் ‘மேம்பட்டுள்ளன’ எனவும் அறிக்கை தெரிவித்தது.

