போப் லியோ மருத்துவமனையில் சேர்ப்பு

போப் லியோ மருத்துவமனையில் சேர்ப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

13 Oct 2026 - 9:52 am

1 mins read

வத்திகன்: கத்தோலிக்கர்களின் தலைவரான பதினான்காம் போப் லியோ, நுரையீரலில் உள்ள சிறிய தசை வளர்ச்சியை நீக்க செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருக்கிறார்.

மருத்துவப் பரிசோதனையின்போது நுரையீரலில் உள்ள அந்தச் சிறிய பிரச்சினை கண்டறியப்பட்டது குறித்து இம்மாதம் 11ஆம் தேதி, 71 வயதுப் போப் லியோ அறிவித்தார்.

அது முன்கூட்டியே கண்டறியப்பட்டது என்றும் நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதையடுத்து அக்டோபர் 13ஆம் தேதி, வத்திகனிலிருந்து ரோமின் கெமெலி மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வத்திகன் ஊடக அலுவலகம் தெரிவித்தது.

2025ஆம் ஆண்டு மே மாதம் உலக அளவில் உள்ள கத்தோலிக்க கார்டினல்களால் போப்பாகத் தேர்வுசெய்யப்பட்ட லியோவின் உடல்நலம் ஒரு வாரத்துக்குள் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வத்திகன் குறிப்பிட்டது.

அதை முன்னிட்டு இம்மாதம் 20ஆம் தேதிவரை போப் லியோவின் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, நவம்பர் மாதம் 6ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதிவரை போப் லியோ, உருகுவே, ஆர்ஜென்டினா, பெரு ஆகியவற்றுக்கு 11 நாள் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறியிருந்தார்.

அந்தப் பயணம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
போப்மருத்துவமனைஅனுமதி