தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல் - ஈரான் பேச்சுவார்த்தைக்குப் போப்பாண்டவர் கோரிக்கை

1 mins read
77fe0e71-fb08-401f-98d4-1e16d8cca237
அமரர் போப் பிரான்சிசுக்குப் பிறகு மே 8ஆம் தேதியன்று போப் லியோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

வத்திகன்: ஈரானும் இஸ்ரேலும் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இருநாட்டு அதிகாரிகளையும் நியாயத்துடன் நடந்துகொள்ளும்படி போப்பாண்டவர் லியோ கேட்டுக்கொண்டுள்ளார். அந்நாடுகள் அமைதிப்பேச்சில் ஈடுபடுமாறும் அவர் ஊக்குவித்துள்ளார்.

நிலவரத்தை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருவதாக போப் லியோ, செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் கூடியிருந்த சபையினர் முன் தெரிவித்தார். 

அணுவாயுதல் மிரட்டல் இல்லாத உலகை உருவாக்குவதற்கான கடப்பாடு அமைதியான அணுகுமுறை வழியாகவும் நேர்மையான பேச்சுவார்த்தை வழியும் நாடப்படவேண்டும் என்றும் போப் லியோ கூறினார்.

“ஒருவர் மற்றவரின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது. அமைதிக்கான முயற்சிகளை ஆதரிப்பதும் சமாதானத்திற்கான வழிகளைத் தொடங்குவதும் பாதுகாப்பையும் நற்பெயரையும் உறுதிசெய்யும் தீர்வுகளை மேம்படுத்துவதும் எல்லா நாடுகளின் கடமையாகும்,” என்று போப் லியோ தெரிவித்துள்ளார்.

அமரர் போப் பிரான்சிசுக்குப் பிறகு மே 8ஆம் தேதியன்று போப் லியோ தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பொது நிகழ்ச்சிகளில் முன்தயாரிப்பின்றி அடிக்கடி பேசும் போப் பிரான்சிசுக்கு மாறாக போப் லியோ, கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் முன்தயாரிப்பு செய்த பிறகே உரையாற்றுவதாகக் கவனிப்பாளர்கள் கண்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 13) ஈரான்மீது தாக்குதல் தொடுத்த இஸ்ரேல், அந்நாட்டின் ராணுவ, அணுவாற்றல் தளங்களுக்குக் குறிவைத்தது. 

அணுவாயுதங்களை உருவாக்க ஈரானைத் தடுப்பது தனது தாக்குதலின் நோக்கம் என்று இஸ்ரேல் கூறியது. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ப் பாய்ச்சியது. அந்தத் தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர். அதே வேளையில், இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்