தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல் கூட்டுப் பிரார்த்தனையில் ஒற்றுமைக்குக் குரல்கொடுத்த போப் லியோ

2 mins read
882134e7-1bad-4220-8c47-73b978bf4d83
தேவாலயத்தின் ஒற்றுமைக்காகக் குரல்கொடுத்த போப் லியோ, அது வலிமையால் ஆகாது என்றும் அன்பினால் ஆகும் என்றும் கூறினார். - படம் ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு வெண்ணிற வாகனத்தில் வந்த திருத்தந்தை பதினான்காம் (XIV) லியோ, சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான அன்பர்களுக்குக் கைகாட்டி அவர்களது உற்சாகக் கூக்குரல்களுக்குப் பாத்திரமானார்.

உலகிலுள்ள கிட்டத்தட்ட 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களுக்குப் புதிய தலைவராக போப் லியோ, முதன்முறையாக அந்தப் பதவியில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தியுள்ளார்.

இத்தாலிய மொழியில் உரையாற்றிய போப் லியோ, தற்காலச் சவால்களைக் கண்டு தயங்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

வறுமைக்கு எதிராகப் போரிடுவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற விவகாரங்களில் போப் ஃபிரான்சிஸ் செய்திருந்த நற்பணிகளைத் தொடரப் போவதாகவும் அவர் கூறினார்.

தேவாலயத்தின் ஒற்றுமைக்காகக் குரல்கொடுத்த போப் லியோ, அது வலிமையால் ஆகாது என்றும் அன்பினால் ஆகும் என்றும் கூறினார்.

சிக்காகோவில் பிறந்த 69 வயது போப் லியாே, பெருவில் சமய போதகராகப் பல்லாண்டுகள் கழித்திருக்கிறார். அமெரிக்கக் குடியுரிமையுடன் பெருவியக் குடியுரிமையும் அவருக்கு உள்ளது.

‘வாழ்க திருத்தந்தை’ என்ற பொருள்கொண்ட ‘விவா இல் பாபா’ என்ற முழக்கவரியை மக்கள் கூவிக்கொண்டிருந்தனர். 

ராபர்ட் பிரவோஸ்ட், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேராயராக இருந்து மே 8ஆம் தேதி புதிய போப்பாகத் தெரிவு செய்யப்பட்டார். 

இந்தக் கூட்டுப் பிராத்தனையில் அமெரிக்க துணையதிபர் ஜே.டி வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஆகியோர் அமெரிக்கக் குழுவினருடன் பங்கேற்றனர்.

உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியும் பெரு, இஸ்ரேல், நைஜீரியா, இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதமர்களும் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னதாக போப் லியோ, அவருக்கு முன்னர் அந்தப் பதவியில் இருந்த போப் ஃபிரான்சிசைப் பலமுறை புகழ்ந்திருக்கிறார். இருந்தபோதும், அவரது சொந்த அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது விரிவாக அறியப்படவில்லை.

போப்பாண்டவர் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்ட இரவன்று உங்கள் எல்லோர்க்கும் அமைதி இருக்கட்டும் என்ற ஆசியுடன் அன்பர்களை வாழ்த்தினார்.

கத்தாேலிக்கத் தேவாலயத்தின் கிழக்கு அலுவலக அதிகாரிகளுக்கு மே 14ஆம் தேதி உரையாற்றியபோது அமைதிக்காகத் தாம் எல்லா முயற்சிகளையும் எடுக்கப்போவதாகச் சூளுரைத்தார்.

போர் தவிர்க்கக்கூடிய ஒன்றுதான் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போப் லியோ,  உலகப் பூசல்களில் சமரசம் பேசுவதற்கு வத்திக்கன் என்றும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

லத்தின், இத்தாலிய, கிரேக்க, போர்ச்சுகீசிய மொழி, அரபு, போலந்து, சீனம் ஆகிய மொழிகளில் கூறப்பட்ட பிரார்த்தனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் அங்கம் வகித்தன.  

குறிப்புச் சொற்கள்