100,000 லெபனான் மக்களுடன் பிரார்த்தனை செய்த போப்

2 mins read
cfa63391-b12e-455a-8b1e-5626484cdcbb
போப் லியோ, லெபனானின் பல தரப்பு மக்களைச் சந்தித்துப் பேசினார். - படம்: இபிஏ

ரோம்: போப்பாண்டவர் லியோ தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

70 வயது போப் லியோ கடந்த வாரம் தனது வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கினார். நான்கு நாள் துருக்கியிலும் மூன்று நாள் லெபனானிலும் அவர் இருந்தார். அவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) தமது பயணத்தை முடித்துவிட்டு ரோம் புறப்பட்டார்.

போராலும் பூசல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் அமைதி நிலைக்க வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தினார். மனிதகுலத்திற்குப் போர் எவ்வளவு பெரிய பிரச்சினையாக உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டு பெய்ரூட் துறைமுகத்தில் பெரும் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. அந்த இடத்தில் போப் லியோ, 100,000 மக்களுடன் பிரார்த்தனை செய்தார்.

உலக அமைதிக்கு முன்னுரிமை தரும் போப் லியோ, லெபனான் தலைவர்களிடம் வட்டார அமைதி குறித்துப் பேசினார்.

கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. இதில் பல உயிரிழப்புகளும் பொருட்சேதமும் ஏற்பட்டது. இப்போதும் இரு தரப்புகளுக்கு இடையே பூசல் உள்ளது.

திங்கட்கிழமை (டிசம்பர் 1) போப் லியோ, லெபனானின் கிறிஸ்துவ, சன்னி முஸ்லிம் பிரிவினர், ஷியா முஸ்லிம் பிரிவினர், டிரூஸ் சமயத்தினர் உள்ளிட்ட பல தரப்பு மக்களைச் சந்தித்துப் பேசினார்.

போப்பாகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் திரு லியோ குறித்து உலகிற்கு அவ்வளவாகத் தெரியாது. அவர் கடந்த மே மாதம் போப்பாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தில் போப் லியோ எவ்வாறு உரையாற்றுகிறார், வெளிநாட்டு மக்களிடம் எப்படி உறவாடுகிறார் என்பன போன்றவை கூர்ந்து கவனிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்