ஈரான் போர் குறித்த அமெரிக்காவின் கூற்றைப் போப் நிராகரித்தார்

ஈரான் போர் குறித்த அமெரிக்காவின் கூற்றைப் போப் நிராகரித்தார்

2 mins read
9a3db1ea-af75-4dd1-bd86-a1a62158dd65
“கடவுள் எந்த மோதலையும் ஆசீர்வதிப்பதில்லை,” என்று போப் லியோ, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் எழுதினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வத்திகன்: ஈரானுடனான மோதலில் கடவுள் அமெரிக்காவின் பக்கம் இருக்கிறார் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வாதத்திற்குப் போப் லியோ சவால் விடுத்துள்ளார். இது, அவர் அண்மையில் தொடர்ந்து அளித்துவரும் கண்டனங்களின் தொடர்ச்சியாகும்.

அதேவேளையில், ஜனவரியில் நடந்த ஒரு சர்ச்சைக்குரிய சந்திப்பு குறித்த செய்திகளைத் தொடர்ந்து, வத்திக்கனும் வெள்ளை மாளிகையும் தங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை என்று மறுத்துள்ளன.

“கடவுள் எந்த மோதலையும் ஆசீர்வதிப்பதில்லை,” என்று போப்பாண்டவர் ஏப்ரல் 10ஆம் தேதி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

சமாதானத்தின் இளவரசரான கிறிஸ்துவின் சீடர் எவரும், ஒரு காலத்தில் வாளை ஏந்தி இன்று குண்டுகளை வீசுபவர்களின் பக்கம் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். ராணுவ நடவடிக்கை சுதந்திரத்திற்கோ அமைதிக் காலங்களுக்கோ வழிவகுக்காது.

போப் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரைச் சமயரீதியாக விவரித்து, சுட்டு வீழ்த்தப்பட்ட ஓர் அமெரிக்கப் போர் விமானியை இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிட்டு, அமெரிக்கப் படைகளுக்குக் கடவுள் தெய்வீகப் பாதுகாப்பை வழங்கியுள்ளார் என்று வாதிட்டு மீண்டும் மீண்டும் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து போப்பின் அந்தக் கருத்து வெளிவந்தது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், போரில் அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கடவுள் ஆதரிக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, ​​திரு டிரம்ப், “நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் கடவுள் நல்லவர்,” என்று பதிலளித்தார்.

அதே செய்தியாளர் சந்திப்பில், புனித வெள்ளியன்று சுட்டு வீழ்த்தப்பட்டு, பின்னர் ஈஸ்டர் ஞாயிறன்று மீட்கப்பட்ட ஓர் அமெரிக்கப் போர் விமானியின் நிகழ்விற்கும் கிறிஸ்துவிற்கும் இடையே திரு ஹெக்செத் ஒப்புமைகளைச் சுட்டிக்காட்டினார்.

“ஒரு விமானி புத்துயிர் பெற்றார், அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர், ஒரு தேசம் மகிழ்கிறது, கடவுள் நல்லவர்,” என்று அவர் கூறினார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஒரு தனி செய்தியாளர் சந்திப்பில், ஈரானுக்கு எதிரான ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தாக்குதல்கள் “தெய்வீக அருளின் பாதுகாப்பின் கீழ், அற்புதப் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் முயற்சி,” என்று திரு ஹெக்செத் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்