தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போப்பின் கிறிஸ்துமஸ் செய்தி: உக்ரேனியப் போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

1 mins read
2e9c73f3-660d-4ec9-8400-6107d36a792e
வத்திகனில் உள்ள செயின்ட் பீட்டர்’ஸ் தேவாலயத்தின் மேல்மாடத்திலிருந்து கூடியிருந்தோர்க்குக் காட்சியளித்த போப் ஃபிரான்சிஸ். - படம்: ஏஎஃப்பி

வத்திகன்: போப் ஃபிரான்சிஸ் டிசம்பர் 25ஆம் தேதி விடுத்த கிறிஸ்துமஸ் செய்தியில் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஈராண்டுகளுக்குமுன் ரஷ்யா தொடங்கிய முழுமையான படையெடுப்பில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் தினத்தில் ஆற்றிய உரையில், உக்ரேனியப் போர் குறித்து வெளிப்படையாகக் குறிப்பிட்ட போப், பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான துணிச்சலுக்கு அழைப்பு விடுத்தார்.

வத்திகனில் உள்ள செயின்ட் பீட்டர்’ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் செயின்ட் பீட்டர்’ஸ் தேவாலய மேல்மாடத்திலிருந்து அவர் உரையாற்றினார்.

“போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனில் ஆயுதங்களின் ஓசை அடங்கட்டும்” என்று கூறிய போப் ஃபிரான்சிஸ், நியாயமான, நீடித்த அமைதியை ஏற்படுத்தும் கலந்துரையாடலை வலியுறுத்தினார்.

முன்னதாக இந்த ஆண்டு (2024), உக்ரேன் ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் துணிச்சலுடன் வெள்ளைக் கொடி ஏந்தவேண்டும் என்று கூறியதற்காக உக்ரேனிய அதிகாரிகள் போப்பை விமர்சித்தனர்.

போருக்கு முந்தைய உக்ரேனிய எல்லைகளை மீட்டெடுக்காமல் அமைதிப் பேச்சில் ஈடுபடப்போவதில்லை என்று அந்நாட்டு வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார். ஆனால், திரு டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அமைதிப் பேச்சில் திரு ஸெலென்ஸ்கி ஆர்வம் காட்டுகிறார்.

88 வயதாகும் போப் ஃபிரான்சிஸ் அப்பொறுப்பை ஏற்ற பிறகு கொண்டாடும் 12வது கிறிஸ்துமஸ் நாளில், லெபனான், மாலி, மொஸாம்பிக், வெனிசுவேலா, நிகராகுவா போன்ற இடங்களிலும் அரசியல், சமூக, ராணுவச் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்