தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலியர்கள் தாக்கப்படும் சாத்தியம்: இலங்கையில் மூவர் கைது

1 mins read
7ac21368-a205-46f0-ba60-4491f23c368b
அறுகம் குடா சுற்றுலாத்தலம். - கோப்புப் படம்: ஊடகம்

கொழும்பு: இலங்கைக்கு வரும் இஸ்ரேலிய சுற்றுப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அளித்த எச்சரிக்கைத் தகவலைத் தொடர்ந்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் கூறியுள்ளார்.

அது குறித்து அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 24) செய்தியாளர்களிடம் பேசினார்.

“பிடிபட்டு உள்ள மூவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். அமெரிக்காவின் எச்சரிக்கையை நாங்கள் மிகவும் முக்கியமான தகவலாக எடுத்துக்கொண்டு பாதுகாப்பை அதிகரித்து உள்ளோம்

“இலங்கையின் கிழக்குப் பகுதியில் யூத சமூகத்தினர் அதிகமாக ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் பிடிபட்டனர்.

“குறிப்பாக, அறுகம் குடா உல்லாசத்தலத்தைச் சுற்றிலும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதர சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது,” என்றார் இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சருமான திரு ஹெராத்.

இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கைக்குச் சுற்றுப்பயணியாக வந்த 1.5 மில்லியன் பேரில் 1.5 விழுக்காட்டுக்கும் குறைவானோர் இஸ்ரேலிய குடிமக்கள். அதாவது, ஏறத்தாழ 20,000 இஸ்ரேலியர்கள் இந்த ஒன்பது மாதத்தில் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர்.

தற்போது 570 இஸ்ரேலியர்கள் இலங்கையில் உள்ளனர். அவர்களுக்காக இலங்கைக் காவல்துறை அவசர உதவிக்கான தொலைபேசி வசதியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, அறுகம் குடா விடுமுறை உல்லாசத்தலத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது குடிமக்களைக் கேட்டுக்கொண்டு உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்