கோலாலம்பூர்: மலேசியாவில், சாலைகளில் ஏற்படும் சிறு குழிகள் குறித்து ‘மைஜாலான்’ கைப்பேசிச் செயலிவழி புகார்கள் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அவை சரிசெய்யப்பட வேண்டும் என்று பணித்துறைத் துணை அமைச்சர் அகமது மஸ்லான் கூறியுள்ளார்.
அந்தச் சாலை எந்த எல்லைப்பகுதியின் கீழ் வந்தாலும், அனைத்து அதிகாரிகளும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார் அவர்.
‘‘பணித்துறை அமைச்சின்கீழ், சேதமடைந்த சாலைகளை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்யவேண்டும். மற்ற அதிகாரிகளும் அதே நேரத்திற்குள் சாலையைச் சரிசெய்யவேண்டும்,’’ என்று திரு அகமது கூறினார்.
‘‘மற்ற சேதங்கள் குறித்த புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வுகாணப்படும்,’’ என்று அவர் சொன்னார்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை, செயலிவழி மொத்தம் 39,371 புகார்கள் வந்ததாக அவர் தெரிவித்தார்.
அவற்றில், 11,959 புகார்கள் மத்திய சாலைகள் சம்பந்தப்பட்டவை. எஞ்சியவை மாநில அரசு, உள்ளூர் அதிகாரிகள், மற்ற அமைப்புகளின்கீழ் வந்தன.
சிறு குழிகள் உட்பட சாலைச் சேதம் ஏற்பட ஐந்து முக்கியக் காரணங்கள் உள்ளதாக திரு அகமது கூறினார். மழை, வெப்பம், வெள்ளம் போன்ற வானிலை நிலவரங்கள் அவற்றில் அடங்கும்.
அளவுக்கு அதிகமான பாரத்தைச் சுமந்துசெல்லும் கனரக வாகனங்கள், சாலையின் ஆயுட்காலம், நடைபாதையின் தரம், முறையாக மேற்கொள்ளப்படாத பணிகள் ஆகியவை மற்ற காரணங்களாகும் என்று திரு அகமது தெரிவித்தார்.

