வாஷிங்டன்: ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை செய்துகொள்ளும் என்றும் இல்லையேல், அந்நாட்டை ‘முடித்துவிடும்’ என்றும் அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (ஜூலை 6) மிரட்டல் விடுத்துள்ளார்.
பிப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்கின் முதல்நாள் போரில் கொல்லப்பட்ட ஈரானியத் தலைவர் அஅயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்குகள் டெஹ்ரானில் நடந்துவரும் நிலையில், ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடரலாம் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
நேரடியாக இல்லாமல், அமெரிக்காவும் ஈரானும் சமரசப் பேச்சாளர்களைக் கொண்டு கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தன. அமைதி எட்டப்படுமா இல்லையா என்ற எந்த அறிகுறிகளும் இதுவரை இல்லை.
பாகிஸ்தானின் உதவியுடன் ஜூன் 16ஆம் தேதி இருநாடுகளுக்கும் 60 நாள் சண்டை நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது. முழு அமைதி ஒப்பந்தம் அதற்குள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “நாங்கள் அமைதி ஒப்பந்தத்தைச் செய்வோம். அவ்வாறு செய்யாமல் போனால், தொடங்கிய காரியத்தை முடித்துவைப்போம். முடித்துவைப்பது சவாலாக இருக்காது. நான் ஒப்பந்தம் செய்வதையே விரும்புகிறேன். 91 மில்லியன் மக்களை பாதிக்க விரும்பவில்லை,” என்று குறிப்பிட்டார்.

