பால்மாவு விவகாரம்: $489 மில்லியன் செலுத்தும் அபட் நிறுவனம்

பால்மாவு விவகாரம்: $489 மில்லியன் செலுத்தும் அபட் நிறுவனம்

2 mins read
a15d9eee-6e8a-4ad1-8c6f-3c07ed399cd9
பால்மாவு மூலம் தயாரிக்கப்பட்ட பாலை உட்கொண்ட நான்கு குழந்தைகளுக்கு அரிதான நுண்ணுயிரித்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் அவர்களில் இருவர் உயிரிழந்ததையும் அடுத்து, அபட் நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத ஆலையில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால்மாவைத் தெரிந்தே விற்பனை செய்ததாக எழுந்த புகார்களைத் தீர்க்க, பிரபல சிமிலாக் பால்மாவு தயாரிப்பாளரான அபபட் லேபரட்டரீஸ் நிறுவனம் ஏறத்தாழ 385 மில்லியன் அமெரிக்க டாலர் (S$489 மில்லியன்) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க நீதித் துறை திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 14) இந்தத் தீர்வு ஒப்பந்தத்தை அறிவித்தது. அமெரிக்காவின் பால்மாவு விநியோகத்தில் கணிசமான பங்கைக் கொண்டிருந்த மிச்சிகனின் ஸ்டர்ஜிஸ் நகரில் உள்ள அபட் நிறுவன ஆலை பல ஆண்டுகளாகக் கடுமையான ஆய்வுக்கு உட்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில், அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட தூள் வடிவப் பால்மாவை அப்பட் நிறுவனம் திரும்பப் பெற்றது. பால்மாவை மூலம் தயாரிக்கப்பட்ட பாலை உட்கொண்ட நான்கு குழந்தைகளுக்கு அரிதான நுண்ணுயிரித்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் தொடர்புபடுத்தியதையடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், நாடு முழுவதும் பல மாதங்களாகப் பால்மாவு பற்றாக்குறை நிலவியது. இருப்பினும், இந்தத் தீர்வில் தனது தவற்றை அல்லது பொறுப்பை அபட் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை.

மிச்சிகன் ஆலையில் கூரை ஒழுகுதல், சீர்குலைந்த உபகரணங்கள், போதுமான தூய்மைப்படுத்தும் நடைமுறைகள் இல்லாதது உள்ளிட்ட சுகாதாரமற்ற நிலைகளை அமெரிக்க அரசாங்கத்தின் புகார் விரிவாகக் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, 2025ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கான ‘போட்டுலிசம்’ நோய்ப் பரவலுடன் தொடர்புடைய ‘பைஹார்ட்’ என்ற பால்மாவு நிறுவனம், அதன் பென்சில்வேனியா ஆலையை மூடியது.

சுத்திகரிக்கப்பட்ட நீர்த் தொட்டியில் பூஞ்சை மற்றும் உற்பத்திப் பகுதியில் மடிந்த பூச்சிகள் இருப்பது உட்பட பாதுகாப்பு விதிமீறல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அபட் நிறுவனமும் தனது அனைத்துப் பால்மாவுத் தொகுதிகளையும் திரும்பப் பெற்றது. அந்நிறுவனம் அளிக்கும் தீர்வுத் தொகையில் கிட்டத்தட்ட 349 மில்லியன் அமெரிக்க டாலர் கூட்டரசு அரசாங்கத்துக்குச் செல்லும். எஞ்சிய 36 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகை, அபட் நிறுவனத்தின் பால்மாவை வாங்கிய மாநில மருத்துவ உதவி மற்றும் பெண்கள், குழந்தைகள், சிறார் கூட்டரசு கூடுதல் ஊட்டச்சத்து திட்டத்துக்கு வழங்கப்படும். ஆலையைப் பற்றி முதன்முதலில் புகார் அளித்த மூவருக்கு 69 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காபால்இழப்பீடுகுழந்தை