இந்தோனீசியாவின் மையப்பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனீசியாவின் மையப்பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

படம்: யுஎஸ்ஜிஎஸ் வலைத்தளப் பக்கம்

16 Jun 2026 - 5:27 pm

2 mins read

ஜகார்த்தா: மத்திய இந்தோனீசியப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும், இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 10.27 மணிக்கு, மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள பலு நகரின் தென்கிழக்கே இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் பலு, சிகி ஆகிய பகுதிகளில் மிகவும் வலுவாக உணரப்பட்டது. இருப்பினும், இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் ஏதுமில்லை என்று இந்தோனீ சியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட தருணத்தில் தனது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பலு நகரைச் சேர்ந்த 42 வயதான நூர்ஹைதர் என்ற பெண்மணி, ‘ஏஎஃப்பி’ செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

“திடீரென்று ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டது. பின்னர் வீடு முழுவதும் குலுங்குவது போல் இருந்தது. கூரை உடைந்து விழப்போவது போல பயங்கர சத்தம் கேட்டது.

“நான் உடனே குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறினேன். சில நொடிகள் எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல் குழம்பிப் போனோம். இருந்தாலும் எப்படியோ பாதுகாப்பாக மீண்டு வெளியே வந்துவிட்டோம்,” என்று கூறினார்.

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு பலு நகரில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையின் காரணமாக 2,200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்