பிலிப்பீன்ஸ் நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழப்பு

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழப்பு

1 of 6
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி
படம்: இபிஏ
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ஏஎஃப்பி
படம்: இபிஏ

08 Jun 2026 - 9:48 am

2 mins read

மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டனாவ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் திங்கட்கிழமையன்று (ஜூன் 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் குறைந்தது 32 பேர் மாண்டுவிட்டதாகவும் 134 பேர் காயமுற்றதாகவும் பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் காயம் அடைந்ததாக பிலிப்பீன்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டது.

மாண்டோரில் குறைந்தது 13 பேர் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டு உயிரிழந்தனர். இது சரன்கானி மாநிலத்தில் நிகழ்ந்தது. அம்மாநிலத்தில் நிலநடுக்கம் காரணமாக 17 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவானது. இதனை ஜெர்மனியின் புவி அறிவியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடல்மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிலிப்பீன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனீசியாவின் புவி இயற்பியல் அமைப்புகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரங்களுக்குள் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, தைவான், பலாவ், பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்தது.

மலேசியாவின் சாபா மாநிலத்தில் கடலோரப் பகுதிகளைத் தவிர்க்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது.

ஜப்பானிய வானிலை ஆய்வு மையமும் அதன் பசிபிக் கடலோரப் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்தது.

ஆனால் அதே நாள் பிற்பகல் நேரத்தில் சுனாமி எச்சரிக்கையை பிலிப்பீன்சும் ஜப்பானும் மீட்டுக்கொண்டன.

கடல் அலைகள் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டதாகவும் கடல் கொந்தளிப்பு எதிர்பார்த்த அளவைவிட குறைவாக இருந்ததாகவும் பிலிப்பீன்ஸ் நில அதிர்வுக் கண்காணிப்பு ஆணையம் கூறியது. சுனாமியாக மாறும் அளவுக்கு அலைகள் பெரிதாக இல்லை என்று அது தெரிவித்தது.

நிலநடுக்கத்தால் பிலிப்பீன்சின் ஜெனரல் சான்டோஸ் நகரில் பல கட்டடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்தன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிலிப்பீன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தோனீசியாவின் வடசுலாவிசியிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. அங்கு சில கட்டடங்களும் இடிந்து விழுந்தன.

பிலிப்பீன்சும் இந்தோனீசியாவும் நில அதிர்வுகள் அதிகம் ஏற்படக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்நிலநடுக்கம்சுனாமி

தொடர்புடைய செய்திகள்