ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தமது அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்கள் சிலரிடம் பொருளியல், புவிசார் அரசியல் உள்ளிட்டவை குறித்து புதன்கிழமை பேசியுள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ள பிரபோவோ தமது அமைச்சரவையில் யார் யார் இருப்பார்கள் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக இந்தோனீசிய ஊடகங்கள் கூறுகின்றன.
தமது அரசாங்கத்தில் உள்ள முக்கிய பொறுப்புகளை வழங்க திரு பிரபோவோ 10க்கும் மேற்பட்டவர்களை அழைத்து பேசியுள்ளார். அதில் தற்போதைய நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்தரவதியும் ஒருவர்.
இந்தோனீசியாவின் அடுத்த அமைச்சரவையில் யார் யார் இருப்பார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
“தற்போது திரு பிரபோவோவும் அவரின் அமைச்சரவையில் இடம்பெறவிருப்பவர்களும் சந்தித்து பேசி வருகின்றனர். அவர்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட இந்த ஏற்பாடு,” என்று பிரபோவோவின் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தோனீசியாவின் பொருளியல் 8 விழுக்காடு வளர்ச்சி பெறவேண்டும் என்பதில் பிரபோவோ குறியாகவுள்ளார்.
மேலும் நாட்டில் வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை அகற்ற வேண்டும் என்று கூறிவருகிறார். 20 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

