காட்டுத்தீயை ஏற்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்க பிரபோவோ உத்தரவு

காட்டுத்தீயை ஏற்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்க பிரபோவோ உத்தரவு

படம்: ஏஎஃப்பி

17 Sep 2026 - 6:08 pm

2 mins read

ஜகார்த்தா: விவசாய நிலங்களைச் சீரமைப்பதற்காகப் ‘வெட்டி எரிக்கும்’ முறையைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டவிதிகளையும் தண்டனைகளையும் அமல்படுத்துமாறு இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தோனீசியாவில் வாரக்கணக்கில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்தோனீசியா கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான காட்டுத்தீப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. 'சூப்பர் எல் நினோ’ எனும் வறண்ட பருவநிலை நாட்டின் காடுகளையும் நிலங்களையும் காய்ந்து போகச் செய்துள்ளது.

இதன் காரணமாக சுமத்ரா, போர்னியோ ஆகிய தீவுகள் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்டுள்ள அபாயகரமான புகைமூட்டம் காரணமாகச் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் மாசடைதலால் அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றிலும் ஆரோக்கியமற்ற காற்றுச்சூழல் நிலவுகிறது.

தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் பிராபோவோ, காட்டுத்தீ ஏற்படுவதற்குக் காரணமான தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிடம் சகிப்புத்தன்மை காட்டப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“சட்டபூர்வத் தண்டனைகள் குறித்து மேலும் ஆராயுமாறு மாநிலச் செயலாளரிடமும் சட்ட அமைச்சரிடமும் கேட்டுக்கொண்டுள்ளேன். சட்டங்களைக் கடுமையாக்கி, இத்தகைய செயல்களை ‘சுற்றுச்சூழல் பயங்கரவாதம்’ என வகைப்படுத்துமாறு மக்கள் பிரதிநிதிகள் சபையை கேட்டுக்கொள்ளலாம். இது மிகவும் தீவிரமான விவகாரம்,” என்று புதன்கிழமை (செப்டம்பர் 16) அன்று இரவு அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் அதிபர் பிரபோவோ குறிப்பிட்டிருந்தார்.

சிறிய நில உரிமையாளர்கள் தீயைப் பயன்படுத்திச் சிறிய நிலப்பரப்புகளைச் சீரமைக்க அனுமதிக்கும் விலக்குமுறைகளை உடனடியாக ரத்து செய்யுமாறு அவர் மாநில அரசாங்கங்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தீப்பரப்பைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது காவல்துறை குற்றவியல் விசாரணை தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இதற்கிடையே, மழைக்காலம் எதிர்பார்த்ததைவிட தாமதமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தக் காட்டுத்தீ நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்று வனத்துறை அமைச்சர் ராஜா ஜூலி ஆண்டனி எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்