ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அதிபராக பிரபோவோ சுபியாந்தோ கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இந்தோனீசிய மக்கள் எதிர்பார்த்த அளவுக்குத் தமது செயல்பாடு அமையாவிட்டால் அடுத்த அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
“எனது பதவிக்காலத்தின் நான்காவது ஆண்டில் எனது செயல்பாடு எனக்கே ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன்,” என்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் திரு பிரபோவோ கூறினார்.
இந்தோனீசியாவின் ஆளும் கூட்டணியில் ஜனநாயகக் கட்சி முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனீசியாவின் அடுத்த அதிபர் தேர்தல் 2029ஆம் ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும்.
அப்போது அதிபர் பிரபோவோவுக்கு 78 வயதாகிவிடும்.
இந்தோனீசியாவின் வருடாந்தர வளர்ச்சியை ஏறத்தாழ 8 விழுக்காட்டுக்கு உயர்த்த திரு பிரபோவோ இலக்கு கொண்டுள்ளார்.
தற்போது அது 5 விழுக்காடாக உள்ளது.