தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் பிரபோவோ

2 mins read
நாட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த உறுதிகூறினார்
b7291af4-4982-4fb9-abf8-ca88a8b13222
இந்தோனீசிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அதிபராகப் பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்றுக்கொண்டார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் எட்டாவது அதிபராக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) பதவியேற்றுள்ள திரு பிரபோவோ சுபியாந்தோ, 73, இந்தோனீசியர்களின் வாழ்வை மேம்படுத்த உறுதிகூறினார்.

அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தாமும் தமது துணை அதிபர் ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவும் இந்தோனீசியர்கள் அனைவருக்கும் சேவையாற்றவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

முழுமையான பொறுப்புணர்வுடன் தாங்கள் செயல்படுவோம் என்று கூறிய அவர், தங்களுக்கு வாக்களிக்காதவர்களையும் சேர்த்து இந்தோனீசியர்கள் அனைவரின் நலனுக்கும் முன்னுரிமை தந்து நாட்டை வழிநடத்தவிருப்பதாகச் சொன்னார்.

இந்தோனீசியாவில் இன்னும் பலர் வாழ்க்கையில் சிரமத்தை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட திரு பிரபோவோ, தமது நிர்வாகம் இந்தோனீசியா முழுவதுமுள்ளோரின் வாழ்வை மேம்படுத்த முனையும் என்றார்.

முன்னைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் ஜிப்ரான், 37, இந்தோனீசியாவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தலைமைத்துவ மாற்றம் நாட்டில் அரசியல் நிலைத்தன்மையைப் பேணும் என்றும் உலக அரங்கில் இந்தோனீசியாவைத் தொடர்ந்து உயரச் செய்யும் என்றும் நம்பப்படுகிறது.

இந்தோனீசிய அதிபரின் பதவியேற்பு விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், புருணை சுல்தான் ஹசானல் போல்கியா, பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், ஆஸ்திரேலியத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், தென்கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ, சீனத் துணை அதிபர் ஹான் ஜெங், ரஷ்யத் துணைப் பிரதமர் டென்னிஸ் மட்டுரோவ், ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமது உரையில், இந்தோனீசியாவின் வெளிநாட்டுக் கொள்கை அணிசாராக் கொள்கையாகத் தொடர்ந்து இருக்கும் என்று கூறிய அதிபர் பிரபோவோ, பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை அது தொடர்ந்து ஆதரிக்கும் என்று வலியுறுத்தினார்.

நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க அனைவருடனும் துணிச்சலுடன் இணைந்து செயல்படும் தலைவராக விளங்க அவர் உறுதியளித்தார். இந்தோனீசியாவின் பிடிஐ-பி (PDI-P) கட்சி கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெறுமா என்று இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையிலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அது கூட்டணியில் இணைந்தால் இந்தோனீசியாவில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு இல்லாமற் போகக்கூடும்.

திரு பிரபோவோ கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 58 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

தமது நிர்வாகத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் பொருளியல் வளர்ச்சி எட்டு விழுக்காட்டை எட்ட அவர் இலக்கு கொண்டுள்ளார்.

இவ்வேளையில், ஆயிரக்கணக்கான இந்தோனீசியர்கள் புதிய அதிபரையும் துணை அதிபரையும் ஆதரித்து ஜகார்த்தா வீதிகளில் அக்டோபர் 20ஆம் தேதி பேரணி நடத்தினர்.

பதவியேற்பு, அது தொடர்பான நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஜகார்த்தாவில் ஏறக்குறைய 100,000 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தலைநகர் ஜகார்த்தா முழுவதும் திரு பிரபோவோ திரு விடோடோ இருவருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளும் சுவரொட்டிகளும் காணப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்தன. முன்னைய அதிபருக்கு நன்றி கூறும் வாசகங்களும் புதிய அதிபர், துணை அதிபர் இருவருக்கும் வாழ்த்து கூறும் வாசகங்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்