ஜகார்த்தா: ஊழலில் ஈடுபடும் இந்தோனீசிய அரசாங்க அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணிகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாதோர் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் அவர் கூறினார்.
இந்தோனீசியாவின் சித்தாந்தமான பஞ்சாசிலாவைக் கௌரவிக்கும் வகையில் திங்கட்கிழமை (ஜூன் 2) அரசு விழா நடைபெற்றது.
அன்று இந்தோனீசியாவில் பொது விடுமுறை.
தலைநகர் ஜகார்த்தாவில் நூற்றுக்கணக்கான ராணுவ அதிகாரிகள், காவல்துறையினர், அமைச்சர்கள் ஆகியோரிடம் அதிபர் பிரபோவோ கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்குப் பேசினார்.
அந்த நிகழ்வில் இந்தோனீசியாவின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும் இந்தோனீசியாலின் முன்னாள் அதிபருமான மேகவதி சுகார்னோபுத்ரி கலந்துகொண்டார்.
அதிபர் தேர்தலில் திரு பிரபோவோ வெற்றி பெற்றதை அடுத்து, அவரையும் திருவாட்டி மேகவதியையும் பொது இடத்தில் ஒன்றாகப் பார்ப்பது இதுவே முதல்முறை.
கடந்த ஏப்ரல் மாதம், இருவரும் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தோனீசியாவின் மிகப் பெரிய பலவீனங்களில் மேல் மட்டத்தினர் மனப்பான்மையும் ஒன்று. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, கட்டுக்கடங்காத ஊழல் ஆகியவை தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றன,” என்று அதிபர் பிரபோவோ சாடினார்.
குறிப்பிட்ட நபரையோ அரசாங்க அமைப்பையோ அவர் குறிப்பிடவில்லை.
இந்தோனீசியாவில் பிளவை ஏற்படுத்தும் இலக்குடன் சில வெளிநாட்டு அமைப்புகள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமையை மேம்படுத்தும் போர்வையில் செயல்பட்டு வருவதாகத் திரு பிரபோவோ கூறினார்.
“இதை அவர்கள் நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கு அவர்கள் நிதி வழங்குகின்றனர். இந்தோனீசியர்களிடையே கருத்து வேறுபாடு, மோதல்களை விளைவிக்கின்றனர்,” என்றார் அதிபர் பிரபோவோ.
திரு பிரபோவோவின் அரசாங்கம் நாடெங்கும் பல மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.
போக்குவரத்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும் அது திட்டமிட்டுள்ளது.
திரு பிரபோவோ, அதிக செலவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பேரளவிலான கொள்கை மாற்றங்களும் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது அவை குறித்து முதலீட்டாளர்கள் அவ்வளவாகக் கவலைப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

