ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள பிரபோவோ சுபியாந்தோ, புதிய அமைச்சுகளை உருவாக்குவதற்கும் தற்போதிருக்கும் அமைச்சுகளை மறுசீரமைப்பதற்கும் கூடுதல் அதிகாரம் பெற்றுள்ளார்.
அதன் மூலம் அவர் தமது இலக்குகளை அடைவதற்கும் அரசியல் பங்காளிகளை நன்கு கவனித்துக்கொள்ளவும் வழி பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு பிரபோவோ, அதிபர் பதவியிலிருந்து விலகவிருக்கும் ஜோக்கோ விடோடோ இருவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆதரவாக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) ஒப்புதல் அளித்தனர்.
மாற்றங்களுக்குக்கீழ், மொத்த அமைச்சுகளின் எண்ணிக்கை 34ஐத் தாண்டக்கூடாது என்ற வரம்பு அகற்றப்படும். மேலும், தற்போது இருக்கும் அமைச்சுகளை மாற்றியமைக்கவும் புதிய அமைச்சுகளை உருவாக்கவும் திரு பிரபோவோவுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
திரு விடோடோ கையெழுத்திட்ட பிறகு புதிய சட்டம் நடப்புக்கு வரும்.
திரு பிரபோவோ, புதிய அமைச்சரவைப் பொறுப்புகளை உருவாக்கி அவற்றில் தமது அரசியல் பங்காளிகளை அமரச் செய்ய இந்த மாற்றங்கள் வழிவகுக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. திரு பிரபோவோ, 82 விழுக்காட்டு நாடாளுமன்ற இடங்களை வகிக்கும் ஏழு கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.