ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் புதிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஆதரித்த வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றிபெறும் நிலை உள்ளது.
இருப்பினும், ஜகார்த்தா நகரம் அதற்கு மாறாக உள்ளது. அதிபரின் ஆதரவு வேட்பாளர்கள் அங்கு தோற்கும் நிலை இருப்பதாக பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பெரும்பாலான இடங்களின் அரசாங்க ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெறுவதன் மூலம், அதிபர் தனது நிர்வாகத்தைச் சரிவர வழிநடத்துவதோடு தமது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இந்தோனீசியாவின் 37 மாநிலங்கள், 415 மாவட்டங்கள், 93 நகரங்கள் ஆகியவற்றின் நிர்வாகத் தலைவர்களைத் தேர்ந்து எடுக்க புதன்கிழமை (நவம்பர் 27) தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அதிகாரபூர்வ முடிவுகள் நவம்பர் 30க்கும் டிசம்பர் 15க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்படும்.
ஆயினும், வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மத்திய ஜாவா, மேற்கு ஜாவா, கிழக்கு ஜாவா ஆகிய மாநிலங்களில் இந்நாள், முன்னாள் அதிபர்களின் ஆதரவுபெற்ற வேட்பாளர்கள் வெல்லக்கூடும் என்று அவை தெரிவித்தன.
இந்த மூன்றும் மக்கள்தொகை மிகுந்த மாநிலங்கள்.
தொடர்புடைய செய்திகள்
“இதுபோன்ற மாநிலங்களில் தமது ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெறுவதால் அதிபரின் கை ஓங்கும். இருப்பினும் ஜகார்த்தாவில் அது பலிக்காது,” என்று ஐஎஸ்இஏஎஸ்-யூசோப் இஷாக் ஆய்வு நிறுவனத்தின் மூத்த கல்விமான் யானுவர் நுக்ரோஹோ கூறியுள்ளார்.
மாநிலத் தலைவர்கள்தான் அதிபரின் உத்தரவை நிறைவேற்றக்கூடியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற திரு பிரபோவோ கடந்த மாதம் புதிய அதிபராகப் பதவி ஏற்றார். நாடாளுமன்றத்தில் உள்ள எட்டுக் கட்சிகளில் ஏழு கட்சிகளின் ஆதரவை அவர் பெற்றுள்ளார்.