டெல் அவிவ்: சக விமானியுடன் சண்டை ஏற்பட்டுத் தாக்கப்பட்ட பிறகு நிலைமை மோசமாகாமல் சம்பந்தப்பட்ட ஃபிளைதுபாய் விமானத்தைச் சவூதி அரேபியாவுக்குத் திருப்பிவிட்ட இந்திய விமானியை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பாராட்டியுள்ளார்.
கைகொடுத்த அவ்விமானத்தின் பயணிகளையும் அவர் பாராட்டினார்.
இந்திய விமானியைத் தாக்கிய மற்றொரு விமானி அந்த விமானத்தைக் கீழே செலுத்தி நொறுங்கச் செய்து அதில் இருந்த பயணிகளைக் கொல்ல முயன்றதாகத் திரு நெட்டன்யாகு கூறினார். இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு வட்டாரத்தில் அதன் பங்காளி நாடு ஒன்றுக்கும் இடையிலான உறவுக்குப் பங்கம் விளைவிப்பதற்கான பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியாக இச்சம்பவத்தை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு வகைப்படுத்தியுள்ளது.
ஃபிளைதுபாய் எஃப்இசெட்1073 எனும் அந்த விமானம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட இந்திய விமானி, ஸ்மித் மச்சார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சக விமானியுடன் ஏற்பட்ட சண்டையின்போது காயமுற்ற அவருக்குச் சவூதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
பயணி கூறியது
புதன்கிழமை (செப்டம்பர் 30) இச்சம்பவத்தில் விமானம் திடீரென 30,000 அடியிலிருந்து கீழே இறங்கியபோது அது மிக மோசமான நிலைக்கு உள்ளானதாய் நினைத்ததாக அல்மோக் இட்டாலி என்ற பயணி தெரிவித்தார். பிறகுதான் அது வாழ்வா சாவா போராட்டம் என்பது தெரியவந்ததாக அவர் சொன்னார்.
விமான ஊழியர்களும் பயணிகளும் நிலைமையைக் கையாண்டதாக இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் டோரோன் ஸ்பீல்மன் தெரிவித்தார். தாக்கப்பட்ட இந்திய விமானி ரத்தக் காயங்களுடன் விமானிகள் அறையில் தரையில் கிடந்ததாகவும் நிலைமை சரியில்லாததை அறிந்த பயணிகள் சிலர் அதற்குள் சென்று உதவியதாகவும் அவர் தெரிவித்தார். பயணி ஒருவர் தாக்கிய விமானியைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் பதிவான காணொளி
சம்பவம் பதிவான காணொளி பகிரப்பட்டிருந்தது. அதன் நம்பகத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.
அந்தக் காணொளியில் ஆடவர் இருவர் ரத்தக் காயங்களுடன் தரையில் கிடந்தது தெரிந்தது. காணொளியில் முகம் தெரியாத ஒருவரின் குரல், அவ்விருவரில் ஒருவர் விமானி என்றும் “அவர்கள் கொல்ல முயன்றனர்” என்றும் ஹீப்ரூ மொழியில் கூறியது கேட்டது.
காயமடைந்த மற்றொருவர், தாக்கியவர் என்றும் ஒரு குரல் சொன்னது.
விமானத்தில் இருந்த மாற்றுப் பணிக்குழு பொறுப்புகளை எடுத்துக்கொண்டு சவூதி அரேபியாவில் உள்ள தாபுக் விமான நிலையத்தில் அதைப் பாதுகாப்பாய்த் தரையிறக்கியதாக ஃபிளைதுபாய் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
