சிங்கப்பூர் வாகன ஓட்டுநர் ஒருவர் ஜோகூர் சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியை அடைந்தபோது அவரது ‘டச்அன்ட்கோ’ கட்டண அட்டையில் போதிய அளவு பணம் இல்லை.
அந்த நேரத்தில் பச்சை நிறச் சீருடையில் இருந்த ஒருவர் ‘அதிகாரி’ போல பாவனை செய்து அந்த சிங்கப்பூர் வாகன ஓட்டுநரிடம் இருந்து $33 பணத்தைப் பெற்றுக்கொண்டு அட்டையின் மதிப்பை கூட்ட உதவுவதாகச் சொல்லி மோசடி செய்துள்ளார்.
அட்டையை சோதித்துப் பார்க்கலாம் என்று ஓட்டுநர் கூறியும் மற்றொரு கட்டண அட்டையைப் பயன்படுத்தி அந்த ஆடவர் வாகனத்தை சாவடியில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
கட்டண அட்டையில் பணம் நிரப்பப்படவில்லை என்பதை பிறகு தெரிந்துகொண்ட ஓட்டுநர் அதுகுறித்து சோதனைச் சாவடியில் உள்ள CIQ காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அங்கிருந்த இரு அதிகாரிகள் தமக்கு சிறந்த முறையில் உதவியதாக அவர்களைப் பாராட்டி வாகன ஓட்டுநர் மின்னஞ்சல் கடிதம் ஒன்றை மலேசிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
அதனை ஜோகூர் பாரு தெற்கு வட்டாரக் காவல்நிலையம் ஃபேஸ்புக்கில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) பகிர்ந்துள்ளது.
புகாரைப் பதிவு செய்யும்போது மிகவும் கவனமாக, கனிவாக நிபுணத்துவத்துடன் அந்த அதிகாரிகள் நடந்துகொண்டதாக வாகன ஓட்டுநர் பாராட்டுக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள் வழங்கிய நற்சேவைக்கு மனமார்ந்த நன்றியையும் ஓட்டுநர் மின்னஞ்சலில் தெரிவித்துக்கொண்டார்.

