ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரைக் காப்பாற்றிய ஆடவருக்குக் குவியும் பாராட்டு

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரைக் காப்பாற்றிய ஆடவருக்குக் குவியும் பாராட்டு

1 of 2
படம்: ஏஎஃப்பி
படம்: ராய்ட்டர்ஸ்

20 Oct 2026 - 6:37 pm

2 mins read

சிட்னி: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹலன் ஹெயின்ஸ்மீது வேண்டுமென்றே காரை மோதிய ஆடவரை மடக்கிப்பிடித்த சிகை அலங்கார நிபுணர் ரிக்கி ஜெஃப்ரீசுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

அந்தச் சம்பவத்தில் 65 வயதான ஹலன், தமது காலை இழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

வங் கரட்டா நகரில் அக்டோபர் 19ஆம் தேதி ஜெஃப்ரீஸ் தமது கடையில் வாடிக்கையாளர்களுக்குச் சிகை அலங்காரம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென பெரும் சத்தம் கேட்டது. வெளியே ஓடிவந்து பார்த்த அவர், டோயோட்டா லேண்ட் குரூஸர் வகை கார் திருவாட்டி ஹலன்மீது மோதியதைக் கண்டார்.

பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு உதவ விரைந்த ஜெஃப்ரீஸ், அக்காரை ஓட்டிவந்த ஆடவரின் பையிலிருந்த கத்தியைப் பறித்து எறிந்தார்.

அந்த நபர் எந்தவொரு தாக்குதலிலும் ஈடுபடாதவாறு, காவல்துறை வரும் வரை அவரைத் தரையில் தள்ளி, மடக்கிப் பிடித்துத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கார் மோதியதில் பலத்த காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹலன், உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் ஒரு காலை இழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்த நிலையில், அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.

தாக்குதல் நடத்திய 43 வயது நபர், நாடாளுமன்ற உறுப்பினர்மீது காரை இருமுறை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அச்சம்பவம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அது ஓர் அரசியல் வன்முறையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இக்கட்டான சூழலில் தைரியமாகச் செயல்பட்ட ஜெஃப்ரீஸை ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ‘வீரர்’ என்று பாராட்டியுள்ளார்.

தாக்குதல் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்