மண்டலேயில் கண்ணீருடன் தொழுகை

2 mins read
4d248a7d-a1c0-4289-beac-3ba53b9c135b
மியன்மாரின் மண்டலே நகரச் சாலையில் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

மண்டலே: நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள மியன்மாரின் மண்டலே நகரத் தெருக்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திங்கட்கிழமை (மார்ச் 31) நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

அதனைக் கண்ட பெண்கள் கண்ணீர்விட்டு அழுதது துயரத்தை மிகுதியாக்குவதாக இருந்தது. இரு பள்ளிவாசல்களுக்கு வெளியே தொழுகையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆண்களையும் அத்துயரம் தொற்றிக்கொண்டது.

நிலநடுக்கம் காரணமாக அவ்விரு பள்ளிவாசல்களிலும் 20 பேர் மாண்டுபோயினர்.

பொழுது புலர்ந்த வேளையில் அங்கு எழுந்த விம்மலும் பெருமூச்சும் காற்றில் கலந்து வேதனையை ஏற்படுத்தின. இறுதியாக, இமாமின் உடைந்த குரல் வெளிப்பட்டு, மாண்டோரின் ஆன்மாவிற்காக இறைவனை வேண்டிக்கொள்ளச் செய்தன.

“அவர்கள் அனைவர்க்கும் அல்லா அமைதி அளிக்கட்டும். நம் எல்லாச் சகோதரர்களும் ஆபத்திலிருந்து விடுபடட்டும்,” என்று அவர் மனமுருக வேண்டிக்கொண்டார்.

மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மண்டலேயின் மாவ்யாகிவா பகுதியிலுள்ள சஜ்ஜா தெற்குப் பள்ளிவாசல் கோபுரம் தரைமட்டமானது. அதில் 14 குழந்தைகளும் இரு பெரியவர்களும் இறந்துபோனதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

“வருத்தத்துடனும் இழப்புடனும் சாலையிலிருந்தபடி நாங்கள் தொழ வேண்டியுள்ளது,” என்று வேதனையுடன் கூறினார் சஜ்ஜா வடக்குப் பள்ளிவாசலின் தலைமை நிர்வாகி ஆங் மைன்ட் ஹுசைன்.

“நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்துவது கடினம். நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவைக் கண்டு நாங்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளோம். தொடர் நில அதிர்வுகளாலும் அது ஏற்படுத்திய அச்சத்தாலும் எங்களது முழு வாழ்க்கையுமே நொறுங்கிப்போனது போன்ற எண்ணத்தை அளிக்கிறது,” என்றார் அவர்.

நிலநடுக்கத்தால் மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் சில கட்டடங்கள் முற்றிலுமாகச் சேதமடைந்தன; மேலும் சில பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்