கிராபியில் படகு கவிழ்ந்து கர்ப்பிணியும் சிறுமியும் உயிரிழப்பு

கிராபியில் படகு கவிழ்ந்து கர்ப்பிணியும் சிறுமியும் உயிரிழப்பு

1 mins read
48892c80-78c4-4413-8adc-c60084698068
கர்ப்பிணியும் அவரின் ஆறு வயது மகளும் சுயநினைவற்ற நிலையிலேயே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. கோப்புப்படம்: ஏஎஃப்பி -

பேங்காக்: விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கச் சென்ற படகுப் பயணம் இரு உயிர்களைப் பறித்து, சோகத்தில் முடிந்தது.

மலேசியாவைச் சேர்ந்த கான் கா செங், 38, தமது 36 வயது மனைவி டான் சென் வூனுடனும் ஆறு வயது மகளுடனும் பொடா தீவிற்குச் சுற்றுப்பயணம் சென்றார்.

கிராபி மாநிலக் கடலோரப் பகுதியில் கடந்த புதன்கிழமை பிற்பகலில் அவர்கள் படகுப் பயணம் மேற்கொண்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய அலைகளில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கிராபி மாநில ஆளுநர் பசகோன் பன்யாலக் தெரிவித்தார்.

"கடலில் தத்தளித்த கான் குடும்பத்தினரையும் படகோட்டியையும் உள்ளூர் மீனவர் ஒருவர் மீட்டு கரைசேர்த்தார். பின்னர் அவர்கள் நால்வரும் கிராபி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்," என்று திரு பன்யாலக் செய்தியாளர்களிடம் கூறினார்.

திரு கானும் தாய்லாந்தைச் சேர்ந்த படகோட்டியான 45 வயது சாலாவும் உயிர்பிழைத்தனர். ஆயினும், திருவாட்டி வூனும் அவரின் மகளும் இறந்துவிட்டனர் என்று தாய்கர் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

திடீர் மழையையும் பெருங்காற்றையும் அடுத்து தமது படகுடன் கரைதிரும்பினார் வரித் சாங்மின், 21, என்ற உள்ளூர் மீனவர். அப்போது, கடலில் தத்தளித்த நால்வரையும் கண்ட திரு சாங்மின், அவர்களை மீட்டு, தமது படகில் ஏற்றிக் கரைசேர்த்தார். அப்போதே கர்ப்பிணியும் சிறுமியும் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்பட்டது.