ஹோர்முஸ் நீரிணை சர்ச்சைக்கிடையே பேச்சுவார்த்தை ஏற்பாடுகள் தீவிரம்

ஹோர்முஸ் நீரிணை சர்ச்சைக்கிடையே பேச்சுவார்த்தை ஏற்பாடுகள் தீவிரம்

2 mins read
5d993a1a-044d-486f-802d-d6a7453c60b5
பேச்சுவார்த்தையில் பங்கேற்க சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்ட அமெரிக்கத் துணை அதிபர் ஜே. டி. வேன்ஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ள வேளையில், சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்க, ஈரான் பிரதிநிதிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக, உயர்மட்ட ஈரானிய பிரதிநிதிகள் குழு சுவிட்சர்லாந்து சென்றுவிட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகம் கூறியது.

அதேபோல, அமெரிக்கத் துணை அதிபர் ஜே. டி. வேன்ஸும் சுவிட்சர்லாந்து சென்று சேர்ந்திருக்கிறார். தம் துணைவி உஷா வேன்ஸுடன் அவர் சிங்கப்பூர் நேரம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.59 மணிக்கு சுவிட்சர்லாந்தில் இறங்கியதாக துணை அதிபர் அலுவலகம் கூறியது.

இருதரப்புப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்பும் முயன்று வரும் வேளையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக டெஹ்ரானின் இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படை சனிக்கிழமை (ஜூன் 20) கூறியது.

லெபனான் போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட உறுதிமொழிகளை இஸ்ரேல் மீறிவிட்டதாகவும் அதனால் ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் கப்பல்கள் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் அந்தப் படை எச்சரித்துள்ளது.

ஆனால், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட தகவலை மறுத்த அமெரிக்க ராணுவம், அந்த நீரிணை வாயிலாக வர்த்தகக் கப்பல்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகத் தெரிவித்தது.

உலகச் சந்தைகளுக்காக 17 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெய்யுடன் 55 வர்த்தகக் கப்பல்கள் சனிக்கிழமை ( ஜூன் 20) ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக அமெரிக்க மத்திய தளபத்தியம் கூறியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இடைக்கால ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல இருதரப்பினரும் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளை இதுபோன்ற நிகழ்வுகள் சிக்கலாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நடுநிலைப் பொறுப்பேற்ற நிலையில், ஜூன் 17ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனும் அந்த இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆயினும், ஹோர்முஸ் நீரிணையும் லெபனானும் இன்னும் பதற்றமிகு பகுதிகளாகவே தொடர்கின்றன.

இந்நிலையில், ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்திடம் பேசிய திரு வேன்ஸ், போர்நிறுத்தம் நீடிக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதற்கான எந்த ஓர் ஆதாரத்தையும் தாம் காணவில்லை என்றும் கூறினார்.

அதேவேளை, சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் தனது கடமைகளை நிறைவேற்ற ஈரான் அழுத்தம் கொடுக்கும் என்று அதன் வெளியுறவு அமைச்சின் செய்தியாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையாத வரை, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அமெரிக்கா விதித்திருந்த சுங்கக் கட்டணம் 60 நாள் போர்நிறுத்தத்தின்போதும் அதன் பின்னரும் வசூலிக்கப்படாது என்று திரு டிரம்ப் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்