இஸ்தான்புல்: துருக்கிய அதிபர் ரிசெப் தய்யிப் எர்துவான், சர்ச்சைக்குரிய தலைமை அரசாங்க வழக்கறிஞர் அகின் குர்லெக்கை நாட்டின் புதிய நீதி அமைச்சராக அறிவித்திருக்கிறார்.
முக்கிய எதிர்க்கட்சிக்கு எதிராகத் திரு குர்லெக் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த குறைகூறலுக்கு உள்ளாயின.
திரு குர்லெக், 2024ஆம் ஆண்டு தலைமை அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்தோர் பலர் கைதுசெய்யப்படுவதையும் குற்றஞ்சாட்டப்படுவதையும் அவர் பார்வையிட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லுவும் அவர்களில் ஒருவர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் தேர்தல் அதிகாரிகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அது அரசியல் சதி என்று பரவலாகக் குறைகூறப்படுகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை அரசாங்கம் மறுக்கிறது.
2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் துருக்கியில் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு அமைச்சரவையில் முதன்முறையாக மாற்றம் செய்துள்ளார் திரு எர்துவான். நீதித் துறையின் முன்னைய அமைச்சர் இல்மாஸ் துங்கிற்குப் பதிலாகத் திரு குர்லெக்கை அவர் நியமித்துள்ளார்.
அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
குடியரசு மக்கள் கட்சியின் துணைத் தலைவர் கூல் சிஃப்ட்சி, திரு குர்லெக்கின் நியமனம், அவர் தங்களின் கட்சிக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்காகக் கொடுக்கப்பட்ட வெகுமதி என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

