ஜகார்த்தா: ஊழல் மூலம் நாட்டுக்குச் சொந்தமானவற்றைத் திருடியதைத் திருப்பிக் கொடுப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படக்கூடும் என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 18ஆம் தேதியன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் நூற்றுக்கணக்கான இந்தோனீசிய மாணவர்களிடம் அவர் பேசினார்.
அதிபர் பிரபோவோ எகிப்துக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஊழல் மூலம் இழந்தவற்றை மீட்க அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.
ஆனால் திட்டம் தொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஊழல் மூலம் பெற்றுக்கொண்டவற்றை இந்தோனீசிய அரசாங்கத்திடம் யாருக்கும் தெரியாமல் திருப்பிக் கொடுக்கும் வழிகளை தமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தக்கூடும் என்று அதிபர் பிரபோவோ கூறினார்.
இந்தோனீசியாவின் அதிபராக திரு பிரபோவோ அக்டோபர் மாதம் 20ஆம் தேதியன்று பதவி ஏற்றார்.
நாட்டில் ஊழலை ஒழிக்கப்போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பேரளவிலான நிதி ஒதுக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்தி ஊழலைத் தடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவருக்கு முன்பு இந்தோனீசியாவின் அதிபராகப் பதவி வகித்த திரு ஜோக்கோ விடோடோவின் பதவிக் காலத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மெதுவடைந்ததை நிபுணர்கள் சுட்டினர்.
நாட்டிடமிருந்து சலுகை பெறும் இந்தோனீசியர்கள் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்று திரு பிரபோவோ கூறினார்.
ஆனால் அதுதொடர்பாக அவர் விளக்கம் அளிக்கவில்லை.
“சட்டத்துக்கு உட்பட்டு கடமையாற்றினால் முன்பு செய்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படாது. எதிர்காலம் பற்றியே சிந்திக்கப்படும்,” என்றார் திரு பிரபோவோ.
அதிபர் பிரபோவின் திட்டங்கள் குறித்து இந்தோனீசிய சட்டத்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஆனால் அது குறித்து அவர் கருத்துரைக்கவில்லை.