மாஸ்கோ: இவ்வாண்டு இறுதிக்குள்ளாக ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியா வருவதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்துவருவதாக ‘கிரம்ளின்’ எனப்படும் அந்நாட்டின் அரசாங்க அமைப்பு திங்கட்கிழமை (நவம்பர் 10) அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்படும் அந்தச் சந்திப்பு ஆக்ககரமானதாக அமையும் என்று கிரம்ளின் நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.
கடைசியாக திரு புட்டின் 2021 டிசம்பரில் இந்தியா வந்துள்ளார். அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து, 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரேன் போர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அரசாங்கப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “நாங்கள் தற்போது அதிபர் புட்டின் இந்தியா வருவதற்கான தீவிர ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம்,” என்று கூறினார்.
சந்திப்பின்போது எவ்வித தீர்மானங்கள், ஒப்பந்தங்கள் செய்யப்படும் என்பதன் விவரங்களை அவர் வழங்க மறுத்துவிட்டார்.
ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் அமெரிக்க அதிபர் டிரம்ப், அச்செயலை நிறுத்திக்கொள்ளுமாறு இந்தியப் பிரதமரை தொடர்ந்து கேட்டுவருகிறார்.

