பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னம், அந்நாட்டின் வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். மருந்தகத் துறையிலிருந்து கடற்சார்ந்த பொறியியல், நீடித்த நிலைத்தன்மை, நிதி வரையிலான பல தரப்பட்ட வர்த்தகத் தலைவர்களுடன் அவர் பேசினார்.
மார்ச் 26ஆம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் காலை நேர உணவு கலந்துரையாடலின்போது இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
பெல்ஜிய வர்த்தகத் தலைர்களின் அக்கறைக்குரிய விவகாரங்களை திரு தர்மன் கேட்டறிந்தார். அதோடு சிங்கப்பூரில் அவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு, வழிகளும் ஆராயப்பட்டன.
திரு தர்மனை பெல்ஜிய மன்னர் பிலிப் வரவேற்று உடன் இருந்தார். இருவரும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையான ‘யூரோநெக்ஸ்ட் பிரஸ்ஸல்ஸ்’ தலைமை நிர்வாகி பெனோய்ட் வான் டென் ஹொவ், பொறியியல் தீர்வு மற்றும் கட்டுமான நிறுவனமான ஜான் டி நுல் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஆன் ஸ்மெட் உள்ளிட்டவர்களையும் சந்தித்தனர்.
வர்த்தக உறவுகள், வாய்ப்புகள், சவால்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு வாய்ப்பாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்று வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பெல்ஜிய நிறுவனங்களின் கூட்டமைப்பு தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டது.
அதிபர் தர்மனின் சிங்கப்பூர் பேராளர் குழுவில் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், சமுதாய குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர்.
1966 அக்டோபரில் அரசதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பெல்ஜியத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையே பரவலான வர்த்தக, முதலீட்டு உறவுகள் நீடித்து வருகிறது. ஏறக்குறைய 400 பெல்ஜிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயல்படுகின்றன.
சிங்கப்பூரில் சுமார் 1,500 பேருடன் பெல்ஜிய சமூகமும் வசித்து வருகிறது. இது, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இரண்டாவது ஆகப்பெரிய சமூகம் என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சு இப் பயணத்திற்கான குறிப்பில் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்-ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மின்னிலக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளியல் உறவு மேலும் வலுப்பெற்றது. அந்தத் தாராள வர்த்தக ஒப்பந்தம், ஆசியான் நாடுகளில் சிங்கப்பூருடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்துகொண்டுள்ள முதல் ஒப்பந்தமாகும். இது, 2019ஆம் ஆண்டில் நடப்புக்கு வந்தது.
திரு தர்மன், பின்னர் தெற்கு வட்டாரமான வாலோனியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு வாலூன் பிரபண்ட் மாநில ஆளுநர் மதிய விருந்து வழங்கி அவரை கௌரவித்தார்.
பல்கலைக் கழகங்கள், சிங்கப்பூரிலும் செயல்படும் புற்றுநோய்க்கான புரோட்டான் சிகிச்சையை ஆராய்ந்து வரும் ஐபிஏ இண்டர்நேஷனல் என்ற மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கும் திரு தர்மன் பயணம் மேற்கொண்டார்.

