உக்ரேனுடன் ரஷ்யா அமைதி உடன்பாடு செய்துகொள்ள வேண்டும்: அதிபர் டிரம்ப்

உக்ரேனுடன் ரஷ்யா அமைதி உடன்பாடு செய்துகொள்ள வேண்டும்: அதிபர் டிரம்ப்

2 mins read
05a6240b-85c1-4c45-be3a-e75139ba6805
ஜி-7 உச்சநிலை மாநாட்டில் (இடமிருந்து) ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஜப்பானியப் பிரதமர் சானே தகாய்ச்சி. - படம்: ஏஎஃப்பி

எவியன்-லெ-பெய்ன்ஸ்: பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சநிலை மாநாட்டில், உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் உலகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, ரஷ்யா உக்ரேனுடன் அமைதி உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பிரான்சின் எவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் ஜி-7 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள அதிபர் டிரம்ப், ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில், தற்போது உக்ரேன் போரை முடிப்பதில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். மாநாட்டின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்ற கூட்டுச் சந்திப்பில் பங்கேற்ற அதிபர் டிரம்ப், விரைவில் அதிபர் ஸெலென்ஸ்கியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உக்ரேனின் கை ஓங்குவதற்கும் ரஷ்யாவை முறியடிப்பதற்கும் தங்களுக்குக் கூடுதல் வான் பாதுகாப்பு ஆதரவு தேவை என்று அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு உக்ரேனிய ராணுவம் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து நடத்திவரும் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் போரின் போக்கு உக்ரேனுக்குச் சாதகமாக மாறிவருவதாகவும் ரஷ்யா தற்போது தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு சோர்வடைந்துள்ளதாகவும் ஐரோப்பியத் தூதர்கள் அதிபர் டிரம்ப்புக்கு விளக்கமளித்துள்ளனர்.

இதற்கிடையே, ஜி-7 உச்சநிலை மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசத் தாம் தயாராக இருப்பதாக அதிபர் ஸெலென்ஸ்கி விடுத்த அழைப்பை ரஷ்யா நிராகரித்துள்ளது.

மாஸ்கோவில் மட்டுமே நேரடிப் பேச்சுவார்த்தை சாத்தியம் என்பதில் அதிபர் புட்டின் உறுதியாக உள்ளார். மேலும், ஈரானுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் இடைக்கால உடன்பாடு, அந்நாட்டின் அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை வலுப்படுத்தவே உதவும் என பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைவர்கள் அதிபர் டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
உக்ரேன்ரஷ்யாடோனல்ட் டிரம்ப்