ஈரான் பற்றி நல்ல செய்தி இருப்பதாக அதிபர் டிரம்ப் தகவல்

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரான் பற்றி நல்ல செய்தி இருப்பதாக அதிபர் டிரம்ப் தகவல்

2 mins read
8ce48511-9a02-436e-b23b-6e7842b8c75e
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும் அதிபர் டிரம்ப். - ஏஎஃப்பி

வாஷிங்டன்/ இஸ்லாமாபாத்: ஈரான் குறித்து நல்ல செய்தி ஒன்று இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அது பற்றி விவரிக்க அவர் மறுத்துவிட்டார்.

அதே சமயத்தில் வரும் புதன்கிழமைக்குள் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் மீண்டும் சண்டை தொடங்கும் என அவர் எச்சரித்தார்.

ஏழு வாரங்களுக்கு முன்பு ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை தொடங்கின.

இதையடுத்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. அதற்குப் போட்டியாக அமெரிக்கா அப்பாதையை முற்றுகையிட்டது. இதனால் அந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 18) முதல் முறையாக பல கப்பல்கள் நீரிணையைக் கடந்து சென்றதாகத் தகவல் வெளியானது. இது, ஈரான் போரில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

நான்கு திரவ எரிபொருள் ஏற்றப்பட்ட கப்பல்கள், பல எண்ணெய் மற்றும் ரசாயனக் கப்பல்கள் லராக் தீவின் தெற்கேயுள்ள ஈரானிய கடல் பகுதி வழியாகச் சென்றன. வளைகுடா நாடுகளிலிருந்து பல கப்பல்கள் அவற்றைப் பின்தொடர்ந்தன.

ஆனால் அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஈரானுக்கு வரும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கா தங்குத் தடையின்றி அனுமதிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணையை தனது கடுமையானக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போவதாக ஈரானிய ராணுவம் சனிக்கிழமை பின்னேரத்தில் கூறியது.

இதனால் ஹோர்முஸ் நீரிணையை கப்பல்கள் கடந்து செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து தகவல் இல்லை.

“மத்திய கிழக்கில் ஈரானுடனான விவகாரம் நல்ல நிலையை நோக்கிச் செல்கிறது,” என்று அரிசோனாவிலிருந்து வாஷிங்டனுக்கு திரும்பிக் கொண்டிருந்த ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

“வார இறுதியில் பேச்சுவார்த்தையை நடத்துகிறோம். எல்லாம் நல்லவிதமாக நடக்கும் என எதிர்பார்க்கிறேன். பல விவகாரங்கள் பேசித் தீர்க்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், எந்தவித ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் அமெரிக்காவின் முற்றுகை தொடரும்,” என்றார் அவர்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் ஏப்ரல் 22ஆம் தேதி காலாவதியாகிறது.

போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்று கேட்டதற்கு, ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நான் அதை நீட்டிக்க மாட்டேன். முற்றுகையும் தொடரும்,” என்றார்.

முன்னதாக, சனிக்கிழமை அதிகாலை இந்தியா, கிரீஸ் நாடுகளின் ஐந்து எண்ணெய்க் கப்பல்கள் நீரிணைக்குள் நுழைய முயற்சி செய்தன. ஆனால் ஈரான் உறுதியளித்தபடி நீரிணையைத் திறக்குமா என்ற சந்தேகம் எழுந்ததால் அவை திரும்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்