வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான்மீது செவ்வாய்க்கிழமை (மே 19) நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையேயான சண்டையை நிறுத்த தீவிரமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால், தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தும்படி வளைகுடா நாடுகள் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது ‘டிரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ஏற்கும் வகையில் ஒரு சுமுக உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்ற தகவல் தமக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஈரானிடம் அணுஆயுதங்கள் இருக்காது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
இருப்பினும், உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான்மீது முழு அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருக்கும் என்றும் அதிபர் டிரம்ப் சூளுரைத்தார்.
இதற்கிடையே, அமெரிக்கா மீண்டும் உத்திபூர்வத் தவறுகளைச் செய்ய வேண்டாம் என ஈரானின் மூத்த ராணுவத் தளபதி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஈரானின் பலத்தைத் தவறாகக் கணிக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
ஈரான் விவகாரத்தில் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, உள்நாட்டில் மக்கள் ஆதரவு அதிபர் டிரம்ப்புக்குச் சரிந்துவரும் சூழலில் வெளியாகியுள்ளது. இந்தத் போரால் அவருக்கு உள்நாட்டில் நாளுக்கு நாள் செல்வாக்குக் குறைந்து வருவதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
மே 18ஆம் தேதி வெளியான நியூயார்க் டைம்ஸ் கருத்துக்கணிப்பின்படி, 64 விழுக்காட்டு அமெரிக்கர்கள் ஈரான்மீது போர் தொடுத்தது தவறான முடிவு என நம்புகின்றனர். மேலும், அதிபராக டிரம்ப்பின் செயல்பாடுகளுக்கு 37 விழுக்காட்டு மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொருளியல், குடியேற்றம், போர் ஆகியவற்றை கையாள்வதில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி, வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குக் கடுமையான சவாலாக அமையும் என்பதை இக்கருத்துக்கணிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

