வாஷிங்டன்: அனைத்துலகக் காற்பந்துச் சங்கத்தின் (ஃபிஃபா) முதல் ஃபிஃபா அமைதிப் பரிசை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பெற்றுள்ளார். சங்கத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்ட்டினோ, இந்த ஆண்டு அந்தப் பரிசை அறிமுகம் செய்தார். உலக மக்களை ஒன்றிணைத்ததோடு அமைதிக்காக உன்னத முயற்சிகளையும் அசாதாரண நடவடிக்கைகளையும் எடுத்த ஒருவரை அங்கீகரிப்பது அமைதிப் பரிசின் நோக்கம்.
திரு டிரம்ப்தான் அந்தப் பரிசைப் பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் திரு இன்ஃபன்ட்டினோவுடன்தான் அவர் சென்றார். அண்மை மாதங்களில் பல பொது நிகழ்ச்சிகளில் இருவரையும் ஒன்றாகத்தான் காணமுடிந்தது.
நிகழ்ச்சி வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) இரவு நடைபெற்றது.
பெரிய தங்கக் கிண்ணத்துடன் பதக்கத்தையும் சான்றிதழையும் திரு இன்ஃபன்ட்டினோ அமெரிக்க அதிபருக்கு வழங்கினார்.
அரசதந்திர முயற்சிகளின் மூலம் மில்லியன் கணக்கான உயிர்களைத் தாம் காப்பாற்றியிருப்பதாகத் திரு டிரம்ப் சொன்னார். போர்கள் தொடங்குவதற்கு முன்னரே அவற்றை நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“வாழ்வில் எனக்குக் கிடைத்த பெருமைகளில் உண்மையிலேயே இதுவும் ஒன்று,” என்றார் திரு டிரம்ப்.
“உலகம் இப்போது பாதுகாப்பாக உள்ளது. ஓராண்டுக்கு முன்பு அமெரிக்கா நன்றாகச் செயல்படவில்லை. இப்போது உலகில் சுறுசுறுப்பாக இயங்கும் நாடு தங்களுடையதுதான்,” என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

