நிலையான சீன-வடகொரிய உறவுக்கு இணைந்து பணியாற்றத் தயார்: அதிபர் ஸி

நிலையான சீன-வடகொரிய உறவுக்கு இணைந்து பணியாற்றத் தயார்: அதிபர் ஸி

படம்: ஏஎஃப்பி

05 Jul 2026 - 2:52 pm

2 mins read

சோல்: சீன அதிபர் ஸி ஜின்பிங், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் சேர்ந்து இருதரப்பு உறவை நீண்டகால, வளமான, நிலையான வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பியோங்யாங்கின் அரசாங்க ஊடகம், ஜூலை 5ஆம் தேதி இதனைத் தெரிவித்தது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையிலும் ரஷ்யாவுடன் வடகொரியா தனது ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வரும் சூழலிலும் இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது உறவை வலுப்படுத்த உறுதியளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 105வது ஆண்டு நிறைவையொட்டி கிம் ஜோங் உன் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்து ஜூலை 1ஆம் தேதி கடிதம் ஒன்றை அதிபர் ஸி அனுப்பியதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘கேசிஎன்ஏ’ தெரிவித்தது.

திரு கிம்மின் வாழ்த்துச் செய்தியில், சீன மக்கள்மீது வடகொரியத் தலைவரும், அங்கு ஆளும் தொழிலாளர் கட்சியும் வடகொரிய மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த, அன்பான உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக திரு ஸி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

“சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் வடகொரியத் தொழிலாளர் கட்சியும் மார்க்சிய ஆளும் கட்சிகளாகும்,” என்று கூறிய திரு ஸி, இரு நாடுகளும் தேசிய சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்து நின்றதோடு, தலைமுறை தலைமுறையாக சோஷலிசக் கொள்கையை கூட்டாக முன்னெடுத்துச் சென்றுள்ளன என்றும் விவரித்தார்.

“நம்மிடையே எட்டப்பட்ட முக்கியமான, பொதுவான புரிந்துணர்வை முழுமையாகச் செயல்படுத்தவும் சீனா-வடகொரியா உறவை நீண்டகால, நல்ல வளர்ச்சிக்கு இட்டுச் செல்லவும் இருதரப்பு தொடர்புடைய துறைகளுக்கும் வட்டாரங்களுக்கும் வழிகாட்ட நான் தயாராக இருக்கிறேன்,” என்றார் திரு ஸி.

அண்மையில் தாம் பியோங்யாங்குக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தைக் குறிப்பிட்டு பேசிய அவர், அப்பயணத்தின்போது தமக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான, அன்பான உபசரிப்புக்காக கிம்முக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்