அமெரிக்காவுக்கு எதிராக அணி சேர்க்கும் முயற்சியில் சீனா

2 mins read
c014c228-85ff-4e0a-8331-245ed66c32fc
சீனாவின் மக்கள் மாமண்டபத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை 2024ஆம் ஆண்டு சந்தித்த மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம். - படம்: பெர்னாமா கோப்புப் படம்

கோலாலம்பூர்: அமெரிக்கா அந்நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு எதிராக விதித்துள்ள வரிகளை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு எதிராக மற்ற நாடுகளை தனது அணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சீனா.

இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15ஆம் தேதி) மூன்று நாள் பயணமாக மலேசியாவுக்கு வருகை புரிகிறார் சீன அதிபர் ஸி ஜின்பிங்.

சீன அதிபர் இவ்வாண்டு மேற்கொள்ள உள்ள உயர்நிலைப் பயணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மலேசியா 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்புக்கு இவ்வாண்டு தலைமை தாங்குவதுடன் ஆண்டு இறுதிவரை அது பல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஸியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கம்போடியா, வியட்னாம் நாடுகளுக்கு அடுத்து மலேசியாவுக்கு சீன அதிபர் வருகை தருவது ஆசியான் அமைப்புக்கு மெருகூட்டும் விதமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசியாவுடனான சீன வர்த்தகம் 2010ஆம் ஆண்டுக்குப் பின் இரட்டிப்பாகி உள்ளது. இந்நிலையில், ஆசியானின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி நாடாக சீனா விளங்குகிறது.

மலேசியாவுக்கும் சீனாவுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதை அண்மையில் இருநாடுகளும் கொண்டாடின.

இதைத் தொடர்ந்து தற்பொழுது திரு ஸி மலேசிய வருகையை மேற்கொண்டுள்ளது இரு நாட்டு உறவில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனீசியாவுடனான முக்கியத்துவம் வாய்ந்த பங்காளித்துவ உறவு முறையை தமது நாடு வலுப்படுத்தப்போவதாக சீன அதிபர் ஸி உறுதி கூறியதாக சீன அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஸின்ஹுவா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்