தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித உடற்பாகங்கள்: அமெரிக்கா

1 mins read
53e6c904-1942-4444-94b1-33bd650dee91
புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் அது உள்நோக்கி வெடித்த சம்பவம் தொடர்பில் பல தகவல்களைக் கண்டறிய உதவும் என்று கருதப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அண்மையில் உள்நோக்கிய வெடிப்புக்கு உள்ளான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கக் கடலோரக் காவற்படை தெரிவித்துள்ளது.

அந்தச் சிதைவுகளில் மனித உடற்பாகங்கள் படிந்திருப்பதாக நம்பப்படுவதாக புதன்கிழமை இரவு அது கூறியது.

டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்றபோது அந்த நீர்மூழ்கிக் கப்பல் உள்நோக்கி வெடித்தது. சம்பவத்தில் அந்நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த ஐவரும் மாண்டனர்.

நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளும் அதில் படிந்திருப்பதாகக் கருதப்படும் மனித உடற்பாகங்களும் கனடாவில் பதிவுசெய்யப்பட்ட ஹொரைஸன் ஆர்க்டிக் கப்பல் மூலம் கனடாவின் செயிண்ட் ஜான் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அங்கிருந்து அமெரிக்கக் கடலோரக் காவற்படைக் கப்பல் மூலம் அவை அமெரிக்கத் துறைமுகத்திற்குக் கொண்டுசெல்லப்படும். அமெரிக்கக் கடற்துறை அதிகாரிகள் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள், மனித உடற்பாகங்கள் என்று கருதப்படுவனவற்றை இவ்வாரம் ஆய்வு செய்வர் என்று கடலோரக் காவற்படை கூறியது.

ஓஷன்கேட் நிறுவனம் இயக்கிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானபோது, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், 58 வயது பிரிட்டிஷ் செல்வந்தர் ஹமீஷ் ஹார்டிங், நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் 77 வயது பிரான்சின் பால்-ஹென்ரி நார்கியோலெ, பிரிட்டனில் பிறந்த பாகிஸ்தானியச் செல்வந்தரான 48 வயது ஷாஹ்ஸாடா தாவுத், அவரது 19 வயது மகன் சுலிமான் ஆகியோர் அதில் இருந்தனர்.

சம்பவம் குறித்து கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும் விசாரணை மேற்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்