குடிநுழைவு முகப்பு எண்கள் அகற்றப்பட்டதால் சட்டவிரோதச் செயல்கள் தடுப்பு

குடிநுழைவு முகப்பு எண்கள் அகற்றப்பட்டதால் சட்டவிரோதச் செயல்கள் தடுப்பு

2 mins read
fd8001d6-4b84-41cf-9cfa-0f2574e15a5f
ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் முகம்மது ரஸ்டி முகம்மது டாருஸ். - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: மலேசிய குடிநுழைவுத் துறை வழக்கத்திற்கு மாறாக அதன் தெற்கு நுழைவாயில்களில் மேற்கொண்ட நடவடிக்கையால் முகப்பு எண்கள் தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

ஜோகூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநரான முகம்மது ரஸ்டி முகம்மது டாருஸ், சில நேர்மையற்ற ஊழியர்களின் உதவியுடன் வெளிநாட்டு ஊழியர்களை நாட்டுக்குள் கொண்டுவரும் சில கும்பல்களின் தந்திரங்களை அறிந்த பிறகு புதிய நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

மலேசியாவிற்குள் நுழைவதற்கு முன்பே தகுந்த ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பிட்ட முகப்புகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

“எடுத்துக்காட்டாக, விமானத்திலிருந்து இறங்கியதும் நேராக ஏழாவது எண் முகப்புக்குச் செல்லுமாறு பயணிகளிடம் கும்பல்கள் அறிவுறுத்தும். அந்த முகப்பில் உள்ள லஞ்சம் பெற்ற அதிகாரி, வெளிநாட்டு ஊழியர்களின் சட்டவிரோத நுழைவை அனுமதிக்கின்றனர்.

“இதனைத் தடுப்பதற்காக ஒரு துணிச்சலான முடிவை எடுத்தோம். நுழைவாயில்களில் உள்ள அனைத்து குடிநுழைவு முகப்புகளின் எண்களை அகற்றினோம். தற்போது முகப்புகளுக்கு எண்களைக் காட்டும் பலகைகள் கிடையாது,” என்று பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணலில் திரு ரஸ்டி தெரிவித்தார்.

சினாய் அனைத்துலக விமான நிலையம், கடல்வழி நுழைவு முனையங்கள் உட்பட முக்கிய நுழைவாயில்களின் நடத்துநர்கள் ஒத்துழைப்புடன் ஜோகூர் குடிநுழைவு புதிய முயற்சியை அமல்படுத்தியது என்றார் அவர்.

“முகப்பு எண்கள் அகற்றப்பட்டதால் எந்த அதிகாரிகள் எந்த முகப்பில் வேலை செய்கிறார்கள் என்பதை அறியாமல் அனைத்து முகப்புகளுக்கும் பயணிகள் செல்ல நேரிடும். இதனால், குறிப்பிட்ட முகப்புகளில் வேலை செய்யும் அதிகாரிகளை கும்பல்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்ட 20 அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இது, மற்ற அதிகாரிகளுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் இருந்தது என்றும் திரு ரஸ்டி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்