ஜப்பானில் 3,000 உணவுப் பொருள்களின் விலை உயர்வு

ஜப்பானில் 3,000 உணவுப் பொருள்களின் விலை உயர்வு

படம்: ராய்ட்டர்ஸ்

30 Sep 2026 - 7:45 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் அக்டோபர் மாதம் 3,153 உணவு மற்றும் பானங்களின் விலை உயரவுள்ளது.

செப்டம்பர் மாதம் 4,965 பொருள்களின் விலை உயர்ந்த நிலையில் இப்போது அக்டோபர் மாதமும் பல உணவுப் பொருள்களின் விலை உயர்கிறது.

உணவுப் பொருள்களின் விலை உயர்வு குறித்து டீகோகு டேட்டாபேங்க் என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் மோசமடைந்து வரும் சூழ்நிலையால் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொருள்களைப் பொட்டலமிடுவதற்கான செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ளன.

மேலும் ஜப்பானிய நாணயமான யென் மதிப்பு குறைந்துள்ளதால் இறக்குமதிச் செலவுகளும் அதிகரித்துள்ளன.

இவற்றைக் காரணம் காட்டி நிறுவனங்கள் தங்களின் கூடுதல் செலவை பயனீட்டாளர்கள்மீது சுமத்துகின்றன.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 20,187 பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.

அக்டோபரில் 1,399 பானங்கள், 820 சுவையூட்டிகள், 668 பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விலைகள் உயரவுள்ளன. மதுபான வரியும் உயர்த்தப்படுவதால் பீர் போன்ற பானங்களின் விலையும் உயர்கிறது.

இதுதவிர 10 பெரிய மின்சார நிறுவனங்களும் நகர எரிவாயு நிறுவனங்களும் அக்டோபர் மாதப் பயன்பாட்டிற்கான கட்டணங்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்த்தவுள்ளன. இதனால் ஒரு சாதாரண குடும்பத்திற்கு 1,578 யென் வரை கூடுதல் செலவு ஏற்படலாம்.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்உணவுவிலையேற்றம்