பெட்டாலிங் ஜெயா: உலகளாவிய விநியோக இடையூறுகளுக்கு மத்தியிலும் மலேசியாவின் மருத்துவச் சாதனங்கள் விநியோகக் கட்டமைப்பு சீராக உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுதொழில் புரிவோர், எளிதில் பாதிக்கப்படக்கூடியோர் ஆகியோருக்குத் தேவையான இலக்குநோக்கிய உதவிகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது குறித்து பேசிய பிரதமர் அன்வார், விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் சவால்கள் அல்லது விலை ஏற்ற, இறக்கங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மலேசிய சுகாதார அமைச்சு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்கும் என்றார்.
“எத்தகைய சவால்கள் எழுந்தபோதிலும், அரசாங்கம் தொடர்ந்து கடினமாக உழைத்து, மக்களின் நலனை நாட்டின் தலையாய முன்னுரிமையாகக் கொண்டு செயல்படும்,” என்று திங்கட்கிழமையன்று (மே 25) சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
உலகளாவியப் பொருளியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் மக்களுக்கு ஏற்படும் கவலைகளையும் அரசாங்கம் நன்கு புரிந்துகொண்டுள்ளது என்று பிரதமர் அன்வார் கூறினார்.
இதன் காரணமாக, நாட்டின் பொருளியலின் முதுகெலும்பாக விளங்கும் சிறுதோட்ட உரிமையாளர்கள் மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடியோருக்கு ஆதரவளிக்க, ‘புடி அக்ரி-கமாடிட்டி’ திட்டத்தின்கீழ் இலக்குநோக்கிய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
‘போதுமான இருப்பு உறுதிசெய்யப்படும்’
இதனிடையே, மிகவும் தேவையான மருந்துப் பொருள்களும் மருத்துவக் கருவிகளும் போதுமான அளவில் இருப்பதை மலேசியப் பொருளியல் அமைச்சும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து உறுதிசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மே 8ஆம் தேதி நிலவரப்படி, மருந்துப் பொருள்கள் விநியோகம் சீராகவும் போதுமானதாகவும் இருப்பதை அறிக்கைகள் காட்டுகின்றன. கிட்டத்தட்ட 28 விழுக்காட்டு மருந்துப் பொருள்களுக்கு மட்டுமே பற்றாக்குறை ஏற்படும் அபாயமுள்ளது. நிலைமை தொடந்து கண்காணிக்கப்படுகிறது,” என்று பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் திங்கட்கிழமை (மே 25) தெரிவித்தார்.

