மலாக்கா: துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடியுடன் எவ்விதப் பிளவும் இல்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நடந்த அவரது ‘பார்ட்டி கெஅடிலான் ராக்யாட்’ (பிகேஆர்) கட்சி மாநாட்டில் தெரிவித்தார்.
தாம் எப்போதும் அமைதியான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் தன்மையைக் கொண்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமருக்கும் துணைப் பிரதமருக்கும் இதுவரை இல்லாத அளவு நம்பிக்கையின்மை நிலவுவதாக அம்னோ கட்சியின் இளையர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் வெளியிட்ட கருத்துகளுக்குப் பிரதமர் பதிலளித்தார்.
இரு தலைவர்களுக்குள் பிளவு என்பது திரு கைரியின் தனிப்பட்ட கருத்து எனவும் பிரதமர் விளக்கினார்.
திரு கைரி அனைத்தையும் மோதல் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“நான் அமைதி வழியில் தீர்வுகளைத் தேடுபவன், நாங்கள் வேறுபட்டவர்கள். அவர் (ஸாஹிட் ஹமிடி) எதையும் நேரடியாக எதிர்த்து முடிவுகளைக் காண்பவர்,” என்று திரு அன்வார் கூறினார்.
“ஆகவேதான் ஸாஹிட், அக்னோ கட்சி, தேசிய முன்னணிக் கூட்டணியினர் அனைவருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை ஆரம்பத்தில் உருவாக்கியபோது நன்றி தெரிவித்தேன்,” என்றார் பிரதமர்.
மாநில அளவில் இருவருக்கும் சில வேறுபாடுகள் உள்ளதை ஏற்றுக்கொண்ட பிரதமர், தேசிய அளவில் சிறந்த உறவுகளை இருவரும் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தார். மேலும், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்பதையும் அவர் சுட்டினார்.
அண்மைய மாநிலத் தேர்தல்களில் திரு அன்வரின் கட்சியும் கூட்டணியும் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ள பின்னணியில் திரு கைரியின் வலையொளிக் கருத்துகள் வெளிவந்தன.
அதோடு, நெகிரி செம்பிலான் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்ததும் பக்காத்தான் ஹராப்பான் உறவுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது என்று நம்பப்படுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் அன்வரின் தலைமையிலான கூட்டணி. துணைப் பிரதமர் பாரிசான் கூட்டணியின் அங்கமான அம்னோ கட்சியின் தலைவர் ஆவார்.


