வெறுப்பு அரசியலை நிராகரிக்க ஜோகூர் மக்களுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு

வெறுப்பு அரசியலை நிராகரிக்க ஜோகூர் மக்களுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு

படம்: பெர்னாமா

07 Jun 2026 - 5:44 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு, தவறான எண்ணங்கள், இனம் அல்லது சமயம் சார்ந்த பிரிவினையைத் தூண்டும் அரசியலை வாக்காளர்கள் நிராகரிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இந்தத் தேர்தல் மூலம் கிடைத்துள்ளது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பு, மலிவு விலை வீடமைப்பு, தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் தலைவர்களையே மக்கள் விரும்புகின்றனர் என்றும் அன்றாட அரசியல் ஆதாயத்துக்காக இன, சமய உணர்வுகளை மூலதனமாக்குபவர்களை அவர்கள் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்து பஹாட்டில் சனிக்கிழமையன்று (ஜூன் 6) நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு மக்கள் பலர் திரண்டனர்.

நியாயமான, முன்னேற்றப் பாதையில் செல்லும் கண்ணியமான மாநிலமாக ஜோகூரை உருவாக்கும் பொது இலக்குடன் அம்மாநிலத்தில் உள்ள மலாய், சீன, இந்தியச் சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை அவர் சுட்டினார்.

“ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகையில், வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை முறையாக, யோசித்து பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் அரசியலை நிராகரிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன். ஒற்றுமையை மேம்படுத்தும், நாட்டு மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும், ஒளிமயமான எதிர்காலத்துக்குப் பாதையை இட்டுச் செல்லும் தலைமைக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களியுங்கள்,” என்றார் பிரதமர் அன்வார்.

இப்பிரசாரக் கூட்டம் குறுகிய காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டபோதிலும் மக்கள் கடல் அலையெனத் திரண்டதைப் பார்த்து மனம் நெகிழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

முதிர்ச்சியான, தூய, எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் சூழலையே மக்கள் விரும்புகின்றனர் என்பதை இது காட்டுவதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார் இப்ராகிம்ஜோகூர்தேர்தல்

தொடர்புடைய செய்திகள்