கோலாலம்பூர்: மலேசியாவும் இந்தியாவும் ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 8) 11 உடன்பாடு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே பல துறைகளில் ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தங்கள் வலுப்படுத்துகின்றன.
சுகாதாரப் பராமரிப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உள்ளிட்ட துறைகளில் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
புத்ராஜெயாவில் முன்னதாக திரு அன்வாரும் திரு மோடியும் சந்தித்துப் பேசினர். அப்போது பல்வேறு விவகாரங்கள், பிற துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
பின்னர் பேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தை, இருதரப்பு உறவை முன்னேற்றுவதற்கு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
2024ல் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட விரிவான உத்திபூர்வ ஒத்துழைப்பின் அடுத்த கட்டமாக ஒப்பந்தங்கள் இடம்பெறுகின்றன.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார்.
சனிக்கிழமை மாலை மலேசியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் அன்வார் இப்ராகிம் நேரில் வந்து அவரை வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கோலாலம்பூரில் மலேசிய வாழ் இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மலேசியாவில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மொழி, இலக்கியம், இரு நாடுகளின் கலாசாரத்தைப் பரிமாறிக்கொள்ளும் பாலமாக இது இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
உலகம் முழுவதும் இந்தியாவை இணைக்கும் மொழியாக தமிழ் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் இலக்கியங்கள் காலம் கடந்து நிலைத்து நிற்கும், தமிழ் மக்கள் தங்கள் திறமையால் மனித குலத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது.
தமிழ்க் கலாசாரமும் திருவிழாக்களும் மலேசியாவில் பிரபலமாக உள்ளன. மலேசியாவில் மூன்று விழுக்காடு மக்கள் தமிழ் பேசுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய குடிமக்களுக்கு 6வது தலைமுறை வரை ஓசிஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அடையாள அட்டை விரிவுபடுத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு கல்வி கற்க வரும் மலேசிய மாணவர்களுக்கு திருவள்ளுவர் உதவித் தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் நாணயம் வலுவாக இருப்பதால் நம்பிக்கை உருவெடுத்துள்ளது. பிரிட்டன், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். இதனால் உலக அளவில் இந்தியாமீது நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரதமர் மோடி சொன்னார்.

